வெள்ளைக்கொடி ஏந்திய 23ம் புலிகேசியா மிஸ்டர் ஸ்டாலின்?

சண்டையில் கிழியாத சட்டை எது என்பது போல திமுக மீது இல்லாத வழக்குகள் எது என்ற நிலை உள்ளது. இது பற்றியெல்லாம் ஆலோசனை செய்ததால் தான் இந்தி திணிப்பை தடுப்பது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள்
 | 

வெள்ளைக்கொடி ஏந்திய 23ம் புலிகேசியா மிஸ்டர் ஸ்டாலின்?

அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், இம்சை அரசன் 23ம் புலிகேசியை போலவே செயல்படுகிறார். இவருக்கும் பாஜகவிற்கும் ரகசிய கூட்டணி இருக்கும் போல, அவர்கள் ஏதாவது ஒரு அறிக்கை விட வேண்டியது. மற்ற யாரும் அதை மதிப்பது கூட இல்லை. ஆனால் ஸ்டாலின் தமிழகத்தையே தட்டி எழுப்பி மிகப் பெரிய போராட்டத்தை நடத்த போவதாக கிளம்புகிறார். 

பின்னர் ஒரு அறிக்கை வரும், அதையே காரணம் காட்டி போராட்டத்தை புஸ் என்று முடித்துவிடுவார்.  ஸ்டாலின் இந்தி எதிர்ப்பே இதற்கு சமீபத்திய உதாரணம்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி தினத்தில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதேயே, சமீபத்தில் நடந்த இந்தி தினத்திலும் அமித்ஷா பேசினார். 

ஆட்சி மொழியாக உள்ள இந்தியை தொடர்பு மொழியாக அதனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் பேசினார். பெரும்பாலான மாநிலங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் ஸ்டாலின் ஏதோ நாளைக்கே இந்தி புகுந்து ஆட்சியை பிடித்து தமிழர்களை அடக்கி ஒடுக்குவது போலவே போராட்டங்கள் அறிவித்தார்.

போராட்ட நாளும் நெருங்கிய நிலையில், கவர்னர் இவரை கூப்பிட்டாராம், அதிலும் மத்திய அரசின் பிரதிநிதியாக அவர் கூப்பிட்டாராம். ஆட்டின் ஒட்டுத்தாடி கவர்னர் பதவி என்ற கொள்கை கொண்ட திமுகவின் தலைவர் ஸ்டாலின், இதுக்காவே காத்துக் கொண்டிருந்தது போல போய் பார்த்தாராம். அவர் அமித்ஷா பேசியதன் பொருளை விளக்கி சொன்னாராம். போராட்டம் வாபஸ் என்று ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

கட்சியில் துரை முருகன், பொன்முடி, ஏ.வ.வேலு என்று டசன் கணக்கில் திமுக நிர்வாகிகள் இருக்கிறர்கள். கனிமொழி, உதயநிதி, தயாநிதி என்று கட்சியில் பொறுப்பு வகிக்கும்  உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கவனர் சந்திப்பில் ஸ்டாலின், டிஆர் பாலு மட்டும் என்பது என்னவோ போல் இருக்கிறது. அதிலும், தமிழகத்தில் இந்தி இல்லாத காரணத்தாலும், ஸ்டாலினின் ஆங்கிலம் கவர்னருக்கு தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும், டிஆர் பாலு மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு தான் சென்று இருப்பார் என்று நம்பலாம்.

அடுத்தது ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அமித்ஷா பல்டி அடித்து விட்டார் என்று புகளாங்கிதம் அடைக்கிறார்கள். ஆனால், அமித்ஷா பேசியதை ஒரு கோடி வாசகர்கள் கொண்ட தமிழ் பத்திரிக்கை தெளிவாக கூறியிருக்கிறது. நான் இந்தியை திணிக்குமாறு கூறவே இல்லை. இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சார அடையாளங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மாநில மொழிகளை பலப்படுத்துவதற்கு நான் மீண்டும், மீண்டும் குரல் கொடுத்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் நானே இந்தி பேசாத மாநிலத்தில் இருந்துதான் வந்துள்ளேன். இதை வைத்து அரசியல் செய்வது என்றால் அது அவர்கள் விருப்பம் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

அதாவது தன் கருத்தை வைத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வது என்றால் அது அவர்கள் விருப்பம் என்று தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் நடத்தலாம் என்று ஒப்புதல் வழங்கிய பிறகு, நம்மவர் அதற்கு மேல் உள்ள வரிகளைக் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

கவர்னர் சந்திப்பு பற்றி பல விஷயங்கள் சமுக ஊடங்களில் வெளி வருகின்றன. அதை உண்மைதான் என்று கூறும் வகையில், 2 ஜி வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி ஏர்செல் வழக்குகளை நீதிபதி அஜய் குஹர் அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் நீதிபதி அஜய் பங்களிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.ஜெயலலிதா வழக்கை குமாரசாமி, குன்ஹா ஆகியோர் விசாரித்தது பற்றி பார்க்கும் போது நீதிபதிகள் மாற்றம் எந்த அளவிற்கு தீர்ப்பினை மாற்றும் என்று தெரிய வருகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முதலில் விடுவிக்கப்பட்டு, பின்னர் குற்றவாளி என தீர்ப்பானது அனைவரும் அறிந்ததே. அது போலவே நம்ம ராஜா, கனிமொழி உட்பட அனைவரும் 2 ஜி வழக்கில் மிக நேர்மையானவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கல்லுாரியில் இருந்து எடுத்த பல கோடி ரூபாய் வழக்கு உள்ளது. தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை கணக்கு காட்ட சில மாணவர்களை வெளியேற்றுவது போல, திமுக 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று போலியாக சின்னத்தை கொடுத்து 4 பேரை வெற்றி பெற வைத்த வழக்கு உள்ளது.

சண்டையில் கிழியாத சட்டை எது என்பது போல திமுக மீது இல்லாத வழக்குகள் எது என்ற நிலை உள்ளது. இது பற்றியெல்லாம் ஆலோசனை செய்ததால் தான் இந்தி திணிப்பை தடுப்பது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள்

இது எந்த அளவிற்கு உண்மை் என்பது ஸ்டாலினுக்கே வெளிச்சம். இது உண்மையாக இருக்க கூடாது என்பது தான் இந்தி திணிப்பை  கண்டு அச்சப்படும் தமிழர்களின் ஒரே நம்பிக்கை. அவ்வாறு இல்லாமல்  திணிப்பை தவிர்க்க வழக்குகள் தான் காரணம் என்றால் திணிப்பவர்களை விட இவர்கள் மோசமானவர்கள். இதை தமிழகம் புரிந்து கொள்ள வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP