மதிமுக இனியும் தேவைதானா திரு வைகோ? 

இனி தனியே கட்சி நடத்த முடியாது என்று வைகோ முடிவு எடுத்துவிட்டால் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணையலாம். ஒரு கட்சியாவது தமிழகத்தில் குறையும். அல்லது அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமுதாய இயக்கமாக மதிமுகவை மாற்றலாம் .இன்றைக்கு மாநிலத்தின் தேவை அதுவாகத்தான் இருக்கிறது. அடுத்த மாநாடு திமுகவில் இணைப்பு மாநாடாக இருந்தால் அனைவருக்கும் நல்லது .
 | 

மதிமுக இனியும் தேவைதானா திரு வைகோ? 

திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் அந்த கட்சியினரை ஒற்றுமையாக கட்டிப் போட்ட ஆளுமை வைகோ. மிசா காலத்தில் அடி உதைப்பட்டாலும், கட்சியில் மெச்ச தகுந்த தலைவராக ஸ்டாலின் இல்லாத நேரம். அப்போதே கருணாநிதிக்கு பிறகு வை.கோபால்சாமிதான் என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் உலாவரத் தொடங்கின. 

இதனால், ஸ்டாலின் அரசியல் அரிசுவட்டுடன் முடிந்து விடுமோ என்ற பயம் கருணாநிதி உட்பட அவரின் குடும்பத்தினருக்கு. இதன் காரணமாக, கருணாநிதியை கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாகவும், அதற்காக வைகோ பிரபாகரனை சந்தித்து திட்டம் தீட்டி விட்டதாகவும், 3–10–1993 அன்று தலைமை செயலாளர்  அனுப்பிய கடிதத்தை பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டு கருணாநிதி அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

அதற்கு  வை.கோபால்சாமி மறுப்பு அறிக்கை வெளியிட்டார். கழகத்தை காப்பாற்ற என்னையே களப்பலியாக தர தயாராக இருக்கிறேன் என்று அதில் குமுறியிருந்தார். தமிழகம் முழுவதும் வைகோவிற்கு ஆதரவாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 

வைகோவிற்கு ஆதரவளாக நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயம், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியா புரம் வீரப்பன் என திமுக தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் இறுதி ஊர்வலத்தில் உணர்ச்சி மழை பொழிந்தார், கண்ணீர் விட்டு கதறினார். அதன் பின்னர் வைகோவிற்கு 8 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கரம் நீட்டினார்கள்.  குடவாசலில் நடந்த பொதுக்கூட்டம் மதிமுகவின் தொடக்க கூட்டமாகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது. 

தொண்டர்களின் உணர்வால், உயிரால் தொடங்கப்பட்ட மதிமுக, வைகோவின் உணர்ச்சியால் மட்டும் தடுமாறத் தொடங்கியது. அதிமுகவுடன் கூட்டணி, பின்னர் திமுகவுடன் கூட கூட்டணி என்று நிலைப்பாட்டை மாற்ற மதிமுகவின் வீழ்ச்சி தொடங்கியது.

தேர்தலுக்கு முன்பு வரை சமூக பிரச்னைகளை முன்னெடுத்து மதிமுகவை எழுச்சி பெற வைக்கும் வைகோ, தேர்தலில் திமுக, அதிமுகவிடம் அடகு வைக்கும் நிலையை ஏற்படுத்தி தொண்டர்களை துவளவைத்து விடுகிறார்.

இதன் காரணமாக மதிமுக தொடக்கத்தில் இருந்த பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மீண்டும் திமுகவிற்கே சென்று விட்டனர்.

வைகோவும் கூட அரசியலைத் தாண்டி ஸ்டெர்லைட், சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, முல்லை பெரியாறு பிரச்னை, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், காவிரி பிரச்னை என்று சமுக அக்கரை கொண்ட போராட்டங்களை முன்னெடுத்தார்.

மற்ற தலைவர்கள் கையில் எடுக்காத இந்த பிரச்னைகளை கையில் எடுத்த வைகோ, அரசியலில் பரிணமிக்க முடியவில்லை. அதை விட்டுவிட்டு சமுக பிரச்சனைகளில் போராட்டம் நடத்தி மதிமுகவை சமுக இயக்கமாக மாற்றி இருக்கலாம்.

ஆனால் அதை விடுத்து, இப்போது திமுகவின் பி– டீமாவே மாறிவிட்டார். லோக்சபா தேர்தலில் துரைமுருகன் அவமானப்படுத்தியதும், ஸ்டாலின் வரை சென்று பஞ்சாயத்து கூட்டி ஒரு சீட்டு பிடித்தார். பின்னர் ராஜ்சபா சீட் ஒதுக்கப்பட்டதும், அது தனக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறி கட்சியினருக்கே அல்வா கொடுத்தவர் வைகோ. லோக்சபா தேர்தலில்  மதிமுக சின்னத்திலாவது போட்டியிருக்கலாம். ஆனால் சின்னத்தை வாடகைக்கு பிடித்தவர் வைகோ.

இந்த இழி நிலைகள் எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம். ஆனால் சென்னையில் கடந்த 15ம் தேதி சென்னையில் மதிமுக முப்பெரும் விழாவில் நடந்த விஷயத்தை மறக்கவே முடியாது.

ஸ்டாலினுக்கு போட்டியாக இருப்பார் என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்ட மாநாட்டில், சிறப்பு விருந்தினர் ஸ்டாலின். வைகோவின் மீது கறை பட்டுவிட்டதே என்று தீக்குளித்தவர்கள் ஆன்மா இவர்களை எப்படி மன்னிக்கும். தனியே இருந்தாலும் ஒரு தாய் மக்களாம், ஸ்டாலின் தளபதியாம், வைகோ போர்வாளாம் கூறுகிறார் ஸ்டாலின்.

தளபதியின் கையில் போர்வாள் இருந்தால் தானே அனைவரும் பலன் தரும். தளபதி இல்லாத போர்வாளும், போர்வாள் இல்லாத தளபதியும் யாருக்கும் உபயோகப்பட மாட்டார்கள்.

இனி தனியே கட்சி நடத்த முடியாது என்று வைகோ முடிவு எடுத்துவிட்டால் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணையலாம். ஒரு கட்சியாவது தமிழகத்தில் குறையும். அல்லது அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமுதாய இயக்கமாக மதிமுகவை மாற்றலாம் .இன்றைக்கு மாநிலத்தின் தேவை அதுவாகத்தான் இருக்கிறது. அடுத்த மாநாடு திமுகவில் இணைப்பு மாநாடாக இருந்தால் அனைவருக்கும் நல்லது .வைகோ முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP