வெளுக்கும் சிவப்பு சாயம்; கரையும் கம்யூனிஸ்டுகளின் வேஷம்!

கொள்கை விஷயத்தில் எப்போதும் எதிர் எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் கூட அடித்தட்டு மக்களின் உரிமைகளை பற்றி பேசவாவது ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைத்தால், ஒட்டு மொத்த கட்சி தொண்டர்களின் நேர்மையை, உண்மையை, உழைப்பை 25 கோடி ரூபாய்க்கு இந்த தலைவர்கள் விற்று இருக்கிறார்கள்.
 | 

வெளுக்கும் சிவப்பு சாயம்; கரையும் கம்யூனிஸ்டுகளின் வேஷம்!

சுந்திர போராட்ட காலத்தில்  இந்தியாவின் எதிர்கட்சியாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை கிளைப் பரப்பியவர்கள் இவர்கள். இன்றைக்கு முதலாளித்துவ கட்சிகள் என்று இவர்களால் வர்ணிக்கப்படும் திமுக, அதிமுக கட்சிகளில் தொகுதிகளில் கேட்டு வாங்கும் நிலைக்கு வந்து விட்டது. 

மேற்கு வங்க மாநிலத்தில் 1977 முதல் 2000ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு. இந்தியாவிலேயே இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் ஜோதிபாசு. சுதந்திரம் அடைந்ததில் இருந்து 35 ஆண்டுகள், தொடர்ந்து 25 ஆண்டுகள் இடதுசாரிகள் திரிபுராவை ஆட்சி செய்தனர். அம்மாநில முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் எளிமையின் உருவமாக உணரப்பட்டவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மாணிக் சர்க்கார் திருச்சி வந்திருந்தார். தன் மனைவிக்கு புடவை வாங்க  காதி கிராப்ட் கடைக்கு வந்தார். வந்தவர் திரிபுரா முதல்வர் என்று அறிந்த கடை ஊழியர்கள் 20 ஆயிரம் முதல் விலை உள்ள புடவையை எடுத்துக் காட்ட, அவரோ என் சொந்தப் பணத்தில் சேலை வாங்குகிறேன். 2 ஆயிரம் அதற்குள் எடுத்து காட்டுங்கள் என்றார். நம் கடை ஊழியர் மயக்கம் போடாத குறைதான்.

தமிழகத்தில் கூட சங்கரையா, நல்லக்கண்ணு போன்ற தலைவர் எளிமையின் வடிவமாக, நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்தார்கள். இப்போது கொள்கை, நேர்மை ஆகியவற்றின அடிப்படையில் திகழும் விரல்விட்டு எண்ணக்கூடிய கட்சிகளில் முக்கியமான இடதுசாரிகள் அந்த இடத்தை இழந்துவிட்டார்கள் என்பது அந்த கட்சி தேசிய அந்தஸ்தை இழந்ததைவிட அதிகம் வருந்த வேண்டிய விஷயம்.

லோக்சபா தேர்தல் செலவு குறித்து திமுக தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு 10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தவிர கொங்கு மக்கள் கட்சிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தது. 

இதில் கொங்கு மக்கள் கட்சி பணம் வாங்கியது குறித்து வருத்தப்பட வேண்டியது இல்லை. ஆனால் இத்தனை நாள் பீடி வாங்கி கொடுத்தால் போதும் இரவு முழுவதும் வேலைபார்க்கும் தொண்டர்களை கொண்ட இடது சாரிகள் இப்படி இருப்பார்கள் என்பது அந்த கட்சியின் மீது அபிமானம் கொண்வர்களுக்கு கட்டாயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

இடதுசாரிகளின் இந்த சருக்கல் இப்போது ஏற்பட்டது அல்ல. கடந்த 1990களில் திமுக, கம்யூனிஸ்ட்கள் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்த நேரம். அப்போது திருச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடதுசாரிகளின் கட்சி அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்க திமுக உதவியது. இதற்கு நன்றி விஸ்வாசமாக அந்த அலுவலகங்களை திறந்தது கட்டாயம் திமுக பிரமுகராகத் தான் இருப்பார்.  

2015ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மகேந்திரன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த கட்சிக்குள் அவருக்கு தான் அதிகமான ஆதரவு இருந்தது. ஆனால் அப்போது கட்சியின் செயலாளராக இருந்த தா. பாண்டியனுக்கும் மகேந்திரனுக்கும் இடையிலான முட்டல் மோதல் அடிப்படையில் கடைசி நேரத்தில் முத்தரசன் அந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். இதன் வெளிப்பாடாக தா.பாண்டியன் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து அடங்கியது.

இவற்றின் உச்சத்தை தான் இப்போது திமுக வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த 25 கோடி ரூபாய் அவர்கள் போட்டியிட்ட தொகுதிக்கு மட்டும் தானா, அல்லது கட்சி நிதியா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் மத்தியில் மதவாத கட்சியான பாஜக வரக் கூடாது என்று தான் கூட்டணி வைத்துள்ளோம் என்று ஊரை ஏமாற்றிவிட்டு, திரை மறைவில் பணப் பறிமாற்றம் நடத்தி இருப்பது இடதுசாரி கட்சிகளுக்கு அழகல்ல. 

கொள்கை விஷயத்தில் எப்போதும் எதிர் எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் கூட அடித்தட்டு மக்களின் உரிமைகளை பற்றி பேசவாவது ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைத்தால், ஒட்டு மொத்த கட்சி தொண்டர்களின் நேர்மையை, உண்மையை, உழைப்பை 25 கோடி ரூபாய்க்கு இந்த தலைவர்கள் விற்று இருக்கிறார்கள். 

அவர்களுக்கு இந்த தொகை வேண்டுமானால் வரவாக இருக்கலாம். இதன் மூலம் அந்த கட்சி இழந்துள்ள பெருமையை எவ்வளவு கோடி கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP