’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தாலும், எம்.ஜி.ஆர்- கருணாநிதி நட்பு இறுதி வரை தொடர்ந்து வந்தது.
 | 

’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தாலும், எம்.ஜி.ஆர்- கருணாநிதி நட்பு இறுதி வரை தொடர்ந்து வந்தது. சட்டசபையில் கலைஞரை, ’கருணாநிதி’ எனச் சொன்னதற்காக நடிகரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், துணை அமைச்சராகவும் இருந்த ஐசரிவேலனை சட்டசபையில் தடுத்து  நிறுத்தியதோடு மன்னிப்பு கேட்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். மரணமடையும்வரை ’கலைஞர்’ என்றுதான் அழைத்தாரே தவிர மேடைகளில்கூட  ‘கருணாநிதி’ என்று சொன்னதே இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 'ரிக்‌ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆர், ’பாரத்’ பட்டம் பெற்று வந்தபோது 'கார்கோ’வில்கூட வைக்காமல், தன் கையிலேயே 'மெமன்டோவை’ வைத்திருந்து விமானத்திலிருந்து இறங்கியவுடன், கருணாநிதியின் கரங்களில் ஒப்படைத்தார். இந்த வரவேற்பின்போது “கலைஞர் என்னை வரவேற்றதை - பேரறிஞர் அண்ணாவே என்னை வரவேற்றதாய் மகிழ்கிறேன்” எனக்கூறினார் எம்.ஜி.ஆர். 

’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

கல்லக்குடி ரயில் போராட்டத்திற்குப்பின் திருச்சி சிறைவாசம் முடிந்து கலைஞர், இரயில் மூலம் சென்னை வருகிறார். ’படை பெருத்ததால் கடல் சிறுத்ததோ’ என கூறும் அளவுக்கு, வங்க கடலே கருணாநிதியை வரவேற்க வந்ததுபோல் இரயில் நிலையத்தில் கூட்டம். அவர் இறங்கியவுடன், ரயில் நிலையமே தத்தளித்தது. என்னவாகுமோ அச்சப்பட்ட சூழலில் ஒருவர் கீழே குனிந்து  கலைஞரை தூக்குகிறார். விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தூக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்.

அந்தக் கூட்ட நெரிசலில் எம்.ஜி.ஆரின் விலை உயர்ந்த 'ரேடோ வாட்ச்’ தொலைந்து போனது. கலைஞர்  “வெளிநாட்டு கடிகாரம் தொலைந்ததே” என்றபோது “வெளி நாட்டு கடிகாரம் போனால் என்ன? உள்நாட்டு தலைவரான உங்களை காப்பாற்றிய மகிழ்வுக்கு எத்தனை கடிகாரம் வேண்டுமானாலும் இழக்கலாம்” என்று கூறினாராம் எம்.ஜி.ஆர். அவருக்கு கேபினட் அந்தஸ்தில் சிவப்பு விளக்குடன் பவனி வர சிறுசேமிப்பு தலைவர் பதவி வழங்கினார் கருணாநிதி. 

’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

தான் நடத்திய கட்சிக்கு கருணாநிதி மகன் மு.க.முத்து இணைவதற்கு வந்தபோது “நீங்கள் எவ்வளவு உயர்ந்த தலைவரின் மகன்.. நீங்கள் அவர் மனம் புண்படும்படி நடக்கக் கூடாது. உதவி எது வேண்டுமானாலும் செய்கிறேன். சூழலால் நாங்கள் அரசியலில் பிரிந்திருக்கலாம், குடும்பத்தில் பிரியவில்லை’’ என அனுப்பினார் எம்.ஜி.ஆர். ’பிள்ளையோ பிள்ளை’ படத்தில் நடிக்க பூஜைபோட்ட போது எம்.ஜி.ஆர். இதயவீணை கெட்டப்பில் வந்தார். மு.க.முத்துவின் கையில் தனது கரங்களில் இருந்த கடிகாரத்தை கழற்றி  மாட்டி விட்டார்.

’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

1972 அக்டோபரில் பிரியும் வரை முதல்வராக இருந்த கலைஞர்தான் எம்.ஜி.ஆர் நடித்த படபூஜைக்கு சென்று துவக்கி வைத்தவர்.
1962ல், தஞ்சை தேர்தலில் பரிசுத்த நாடாரை எதிர்த்து சுழலும் நிர்வாக பம்பரமாய் கருணாநிதி  நின்றபோது, எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பிரச்சாரத்தின் நடுவில் எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி  உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. ’’என் மனைவி சதானந்தவதிக்கு ஏதேனும் ஏற்பட்டால் என் குடும்பம்தான் அழும். ஆனால், என் ஆருயிர் நண்பர் கலைஞருக்கு ஏதேனும்  ஏற்பட்டால் தமிழகமே வருந்தும்’’ எனக்கூறி பிரச்சாரத்தை தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். தகவல் அறிந்து கருணாநிதி புறப்படச் சொல்லி, எம்.ஜி.ஆர் போவதற்குள் சதானந்தவதி மரணமடைந்து விட்டார். 

’எனக்கு மனைவியைவிட கலைஞர்தான் முக்கியம்...’ உருகிய எம்.ஜி.ஆர்..!

1987 டிசம்பர் 24ல் எம்.ஜி.ஆர். மரணம். முதல் நாள் ஈரோட்டில் பொதுக்கூட்டம். 40 ஆண்டு கால நண்பர் மரணச் செய்தி கிட்டுகிறது. தனது  வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக, இராமாவரம் சென்றார் கருணாநிதி.  எம்.ஜி.ஆரை சுட்டார் என்ற ஒரே காரணத்திற்காக எம்.ஆர்.ராதாவை 1972 வரை பார்க்காமல், பேசாமல் இருந்தார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் எம்.ஜி.ஆர். சமாதியில் எம்.ஜி.ஆர். சிலை, திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். விருது, திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர் என எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்தவர் கருணாநிதி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP