1. Home
  2. தமிழ்நாடு

நிர்பயா பாலியல் கொலை வழக்கு! கடந்து வந்த பாதை!!

நிர்பயா பாலியல் கொலை வழக்கு! கடந்து வந்த பாதை!!

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா தலைநகர் டெல்லியில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு கொலைச் செய்யப்பட்ட வழக்கில், நடந்த விபரங்களை நமது நியூஸ் டிஎம் வாசகர்களுக்காக இங்கே...

கடந்த 2012ம் வருடம் டிசம்பர் 16ம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை, உடன் வந்த ஆண் நண்பரை பேருந்தில் இருந்து சாலையில் தள்ளிவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்திலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அதன் பின்னர் மாணவியையும் சாலையில் தூக்கி வீசிச் சென்றது அந்த கும்பல். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு அங்குலமாவது அக்கறை செலுத்தப்படுகிறதென்றால் அதற்கு முழு காரணமாக அமைந்தது மாணவி நிர்பயாவின் மரணம் தான். நிர்பயாவின் மரணம் நிகழ்ந்த சமயத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா பாலியல் வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு அடுத்த நாள், டிசம்பர் 17ம் தேதி, பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் தான் குற்றவாளிகள் என போலீசார் கண்டறிந்து, நால்வரையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை மேலும் மோசமானதால், மேல் சிகிச்சைக்காக மாணவியை வெளிநாட்டிற்கு அனுப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் மேல் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர், இந்த வழக்கில் கைது செய்த 6 பேர் மீதும் கற்பழிப்பு வழக்கை, கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

2013 ஜனவரி 2ம் தேதி டெல்லி விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங், திகார் சிறையில் அதே வருடம் மார்ச் மாதம் 11ம் தேதி தற்கொலை செய்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், ஆகஸ்ட் 31ம் தேதி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மேலும், மீதமுள்ள குற்றவாளிகள் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

டெல்லி விரைவு நீதிமன்றம் வழக்கிய தூக்கு தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பின்னர் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அவர்களின் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மீண்டும் இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றமும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து 2017ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மரண தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி, 4 பேரும் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று, இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இவர்கள் 4 பேரும் வரும் ஜனவரி 22ம் தேதி காலை 7ம் மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like