‛கடைசி ஓவரின் முதல் சிக்சர்’: ஜெ., வழியில் எடப்பாடி?

லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், சட்டசபையில், 110 விதியின் கீழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிதியுதவி அறிவித்து, ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளார், முதல்வர் பழனிசாமி. இனி, அந்த கட்சி அறிவிக்கப்போகும் தேர்தல் அறிக்கையில், அடுத்தடுத்த சிக்ஸர்கள் பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 | 

‛கடைசி ஓவரின் முதல் சிக்சர்’: ஜெ., வழியில் எடப்பாடி?

மத்தியில், ஆளும், பா.ஜ., தலைமையிலான அரசின், ஐந்து ஆண்டு ஆட்சி காலம், வரும் மே மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவை தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் தேதி, எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில், பா.ஜ., தலைமை தீவிரமாக செயலாற்றி வருகிறது. 

அதே சமயம், காங்., கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின், நாடு தழுவிய அளவில் நடக்கும் முதல் மக்களவை தேர்தல் என்பதால், அந்த கட்சிக்கு மட்டுமின்றி, ராகுலின் அரசியல் எதிர் காலத்திற்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

இதை தவிர, பிற மாநில கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தேசிய அளவில் அரசியல் களம் இப்படி இருக்கையில், தமிழகத்தில், ஆளும், அ.தி.மு.க., மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

தமிழக அரசியலில் இதுவரை, தேசிய அரசியல் கட்சிகளின் தாக்கம் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றே கூறலாம். 

‛கடைசி ஓவரின் முதல் சிக்சர்’: ஜெ., வழியில் எடப்பாடி?

இது இப்படி இருக்கையில், ஒட்டு மாெத்த அ.தி.மு.க.,வின் முகமாக பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க., தொண்டர்களின் உயிர் நாடியாக திகழ்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் உயிரோடு இல்லாமல், அந்த கட்சிகள் சந்திக்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் இது தான். 

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை என்றே கூறலாம். மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. 

எனவே, இந்த, 20 இடங்களில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றால்,  அது, தற்போதுள்ள அ.தி.மு.க., அரசு தொடர்வதில் சிக்கல் ஏற்படலாம். 

தி.மு.க., மிகக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், ஆளும் தரப்பில் வலுவான தலைவர் இல்லாத போது கூட, மக்கள் நம்பிக்கையை பெற முடியாத கட்சி என்ற அவல நிலை ஏற்படக்கூடும். அது, ஸ்டாலினின் தலைமை பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, இரு பிரதான கட்சிகளும், இந்த லோக்சபா தேர்தலை மிக கவனத்துடன் கையாள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளன. 

இந்த தேர்தல் ரேஸில், தற்போதைய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினை விட சற்று வேகமாக ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டசபையில் அவர் அறிவித்த, 110 விதியின் கீழ் அவர் அறிவித்த அறிவிப்பின் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் கணக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‛கடைசி ஓவரின் முதல் சிக்சர்’: ஜெ., வழியில் எடப்பாடி?

இது குறித்து, தமிழக அரசியலை உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: 

‛‛தமிழகத்தில் கிட்டத்தட்ட, 5.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், எப்படியும், 75 சதவீதம் பேர் தேர்தலில் ஓட்டளிப்பர். அப்படி பார்த்தால், 4 கோடி ஓட்டுகள் பதிவாக வாய்ப்புள்ளது.

பதிவாகும் ஓட்டுகளில், 35 சதவீதத்திற்கு மேல் பெறும் கட்சியே, இதுவரை அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்துள்ளது. இது தான், தமிழக அரசியலில், தேர்தல் வெற்றி, தோல்விக்கான வரலாறு. 

அப்படி பார்க்கையில், நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த வாக்காளர்களை விட, நகர்ப்புற குடிசைவாசிகள் மற்றும் கிராமங்களில் வசிப்போரும் தான், தங்கள் ஓட்டை தவறாமல் பதிவு செய்து வருகின்றனர். 

இதை எல்லாம் பார்க்கும் போது, 1.5 கோடிக்கு மேல் ஓட்டுகள் பெறும் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெறும். இதை மனதில் வைத்து தான், அ.தி.மு.க.,வை சேர்ந்த முதல்வர் எடப்படாடி பழனிசாமி, சட்டசபையில், 110 விதியின் கீழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 

இதன் மூலம், 60 லட்சம் பேர் பலன் அடைவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், ஒருவர் குடும்பத்தில் குறைந்தபட்சம், 4 பேர் என வைத்தால், 2.4 கோடி பேர் உள்ளனர். 

அவர்களில், குறைந்தபட்சம், இருவருக்கு ஓட்டுரிமை இருந்தால், 1.2 கோடி ஓட்டுகள். இந்த உதவித் தொகை பெறுவோரில், 50 சதவீதம் குடும்பத்தார் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தால், 60 லட்சம் ஓட்டுகள். 

கடந்த தேர்தல்களின் கணக்குப் படி, அ.தி.மு.க.,விற்கு, 34 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. தற்போது, ஜெ., இல்லாதது, ஆளும் கட்சி மீதான வெறுப்பு என எல்லாவற்றிற்குமாக, 10 சதவீத ஓட்டுக்களை கழித்தால், 24 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். 

‛கடைசி ஓவரின் முதல் சிக்சர்’: ஜெ., வழியில் எடப்பாடி?

அத்துடன், முறைசாரா தொழிலாளர்களின், 60 லட்சம் ஓட்டுகள் சேர்ந்தால், அந்த கட்சியின் ஓட்டு சதவீதம்,36 சதவீதமாக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால், அ.தி.மு.க., மிக எளிதாக, 1.5 கோடி ஓட்டுகள் என்ற இலக்கை எட்டிவிடும். 

இந்த அரசியல் கணக்கை மனதில் வைத்து தான், சட்டசபையில் விவாதத்திற்கு கூட எடுத்தக் கொள்ள முடியாத வகையில், 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை, முதல்வர் வெளியிட்டிருக்கலாம். 

முன்னாள் முதல்வர் ஜெ., கூட, இதே போன்ற பல அதிரடி அறிவிப்புகளை, 110 விதிகளின் கீழ் அறிவித்து, மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றார். 

கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசுவதாக கூறப்பட்ட நிலையில், தன் தேர்தல் அறிக்கையில், ஏழைகள், பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசி, அ.தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார் ஜெயலலிதா. 

தற்போது, அதே பாணியில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், சட்டசபையில், 110 விதியின் கீழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் நிதியுதவி அறிவித்து, ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளார், முதல்வர் பழனிசாமி.

இனி, அந்த கட்சி அறிவிக்கப்போகும் தேர்தல் அறிக்கையில், அடுத்தடுத்த சிக்ஸர்கள் பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP