1. Home
  2. தமிழ்நாடு

இந்தப் பொங்கலுக்கு இணையாகுமா....?

இந்தப் பொங்கலுக்கு இணையாகுமா....?

வெண்பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், கரும்புச்சாறு பொங்கல், தேங்காய்ப்பால் பொங்கல், நெய் பொங்கல், தினை பொங்கல், ஓட்ஸ் பொங்கல், ரவை பொங்கல், சம்பா பொங்கல்.... இன்னும் அடுக்கிக்கொண்டே போனாலும் பொங்கல் பண்டிகையில் வைக்கப்படும் பொங்கலுக்கு இணையாகுமா இவையெல்லாம்....

சாணம் பூசி, அரிசி மாவில் அலங்கரிக்கப்பட்ட ,லஷ்மி வாசம் செய்யும் அக்னியை ஏந்தும் அடுப்பில்... உலகில் உயிர் வாழ முக்கிய காரணமான உழவனின் உழைப்பில் ஆடி பட்டம் தேடி விதைத்த புதிய நெல்லை உரலில் குத்தி, வாசமிக்க அரிசியைக் களைந்து, நாட்டு மாட்டின் பாலை பையக் கறந்து... குயவனின் கைவண்ணத்தில் உருவான பானையில்.. இயற்கை வாசம் வீசும் பொங்கலுக்கு இணையாகுமா மற்ற பொங்கலெல்லாம்.

ஐம்பதாயிரம் செலவில் அடுக்குமாடி ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுகளெல்லாம் இயற்கையுடன் இணைந்த இந்த பொங்கலுக்கு தலை வணங்கியே ஆகவேண்டும். ஆனால் இதெல்லாம் முன்புதானே.. இப்பொது எங்கே என்று கேட்கும் நகரத்தார்கள்.. கொஞ்சம் கிராமப்புறங்களின் பக்கமும் திரும்பி பாருங்கள். இன்றும் உழவர்கள் தங்கள் உழைப்புக்கு மரியாதை செலுத்த இயற்கையை நாடி இனிமையாக பொங்கல் கொண்டாடுவதைக் கண்குளிர காணலாம்.

பண்டிகையை இப்படித்தான் கொண்டாட வேண்டும். இவைதான் சமைக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டாலும் பொங்கல் பண்டிகையன்று பொங்கல்தான் சிறப்பு என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரியும் அளவுக்கு தித்திப்பான பண்டிகை இது. சரி அடுப்புக் கட்டி அழகாய் பொங்கல் வைத்து அதன் சுவையில் தித்தித்து மகிழ முடியாதவர்களுக்கு தான் இந்த பொங்கல் ரெஸிபி. மற்ற நாட்களில் செய்யும் சர்க்கரைப் பொங்கலை விட இன்றைய தினம் செய்யும் பொங்கலுக்கு உண்மையாகவே ருசி அதிகமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சியும், குடும்பத்தின் கூட்டு வழிபாடும் ,இல்லத்திலும் உள்ளத்திலும் அமர்ந்து உணவிலும் கலந்திருக்கும். அதனால் பொங்கல் பண்டிகையும் தித்திப்புதான். பொங்கலும் தித்திப்புதான். பொங்கல் செய்ய எல்லோருக்கும் தெரியும் என்றாலும் பண்டிகை இனிப்போடு பகிரும்போது பகிர்வதும் தித்திப்புதான்.

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். பொங்கலன்று வைக்கப்படும் தித்திப்பான பொங்கல் வீணாகக் கூடாது. அதே நேரம் பொங்கல் வைக்கப்படும் பானை (பானை இல்லாதவர்கள் வெண்கலத்தில் வைக்க வேண்டும்) நிரம்ப நிரம்ப வழிய வழிய பொங்கலை வைப்பது போல் இல்லத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் வழிந்து ஓடும் என்பது ஐதிகம். அதனால் உங்களுக்கு தகுந்த பொங்கல் பானையை மட்டுமே வைக்க வேண்டும். சர்க்கரையே சேர்க்காமல் இனிப்புக்கு வெல்லம் சேர்த்தாலும் பெயர் என்னவோ சர்க்கரைப்பொங்கல்தான். அதனால் இன்றைய தலைமுறைகள் மிதமிஞ்சிய நாகரிகத்தில் திளைக்கிறோம் என்று சர்க்கரையைக் கொட்டிவிடாதீர்கள்.

சர்க்கரைப் பொங்கல்:

தேவை:

பச்சரிசி.. (உழவர்களின் தொடர்பு இருந்தால் புதிதாக குத்திய புத்தரிசி)- 3 கப்

காய்ச்சாத பசும்பால் - 1 கப்

பாசிப்பருப்பு -1 கப்

நெய்- 100 கிராம்

வெல்லம் -3 கப்

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு, திராட்சை - தலா கால் கப்

செய்முறை:

பானையையும் அடுப்பையும் சுத்தம் செய்து, அடுப்பின் மீது கற்பூரம் ஏற்றி.. இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து கட்டிய பானையில் பசும்பாலை ஊற்றி வையுங்கள். பால் பொங்கி வழியும்.. (பால் பொங்கி வரும் திசையை வைத்து அந்த வருட பலனை அறியலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்) பால் பொங்கும் போது சுத்தம் பருப்பு செய்த பாசிப்பருப்பை போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் போது புத்தம் புது அரிசியாக இருந்தால் அதைக் கழுவாமல் அப்படியே போடுவார்கள். நாம் அரிசியைச் சுத்தம் செய்து கழுவி அரைமணிநேரம் ஊறவைத்துக் கொள்வோம். ஊறவைத்த அரிசியைச் சேர்த்து தீயை அதிகரியுங்கள். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று உரக்க சத்தமிடுங்கள்.

வெல்லத்தைப் பொடியாக நறுக்கி பானையில் நீர் குறைந்து ,முக்கால் பதத்தில் வெந்திருக்கும் அரிசி பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அடிப்பிடிக்காமல் இருக்க வேண்டும் . மிதமானத்தீயில் வைத்து அவ்வப்போது கிளறுங்கள். ஏலத்தூளையும் சேருங்கள். கிளறும்போதே நெய்யை சிறிது சிறிதாக ஊற்றுங்கள். புதுஅரிசியும், வெல்லமும் நெய்யும் இணைந்து நன்றாக கலந்து தழைய தழைய வெல்லம் கொதித்து பானையில் பொங்கி வழியும் தருணம்.. மீதமுள்ள நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து பொங்கலில் கொட்டி இறங்குங்கள்....தித்திப்பான பொங்கலை திவ்யமாய் உண்ணலாம். இது தைத்திருநாளில் வைக்கப்படும் பொங்கல். சிலர் பரம்பரையாக இரண்டு அல்லது மூன்று அடுப்புக் கட்டி பொங்கல் வைப்பார்கள்.ஒன்றில் சர்க்கரைப் பொங்கலும் மற்றொன்றில் வெண்பொங்கலும் வைப்பார்கள்.

பொங்கல் பானையில் பசும்பால் விட்டு புதுஅரிசியைப் போட்டு பொங்க விடுவதே வெண் பொங்கல். படைக்கும் போது வெண்பொங்கல் வைத்து அதன் மேல் வெல்லக்கட்டியை வைப்பார்கள். பானையில் வைக்கப்படும் பொங்கல் நான்கு நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும். இதேப் போல்தான் மாட்டுப்பொங்கலன்று செய்யப்படும் பொங்கலும்.

தித்திப்பான பொங்கல் போல் பொங்கல் பண்டிகையையும் தித்திப்பாக கொண்டாடுவோம்.

newstm.in

Trending News

Latest News

You May Like