1. Home
  2. தமிழ்நாடு

கூலிப்படையை வைத்து மனைவியை போட்டுத்தள்ளிய கணவர்... சொத்துக்காக நாடகம்

கூலிப்படையை வைத்து மனைவியை போட்டுத்தள்ளிய கணவர்... சொத்துக்காக நாடகம்

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா வீதியை சேர்ந்தவர் மாரியப்ப நாடார். பிரபல பாத்திரக்கடை உரிமையாளரான இவருக்கு சீனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், குமரகுரு என்ற மகனும் உள்ளனர். குமரகுருவிற்கு லாவண்யா என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை 4 மணிக்கு குமரகுரு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் இருவர் முதல் தளத்தில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் குமரகுருவின் தாயார் சீனியம்மாளை அக்கும்பல் குத்திவிட்டுத் தப்பித்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீனியம்மாளை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று வீட்டின் கதவு திறந்து கிடந்ததும், சாதாரணமாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருப்பதையும் கண்டுபிடித்தனர் . இதனால் குமரகுருவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கொன்றதில் அவருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியப்போது, என் தந்தை இறந்த பிறகு எனக்கு வந்த சொத்துக்களில் பாதியை என் மனைவி பெயருக்கு எழுதி வைத்தேன். என் கடையில் வியாபாரம் குறைந்து வீட்டில் செலவு அதிகமானது. இதனால் சொத்துக்களை விற்று செலவு செய்து வந்தேன். மனைவி பெயரிலிருந்த சொத்துக்களைக் கேட்டபோது அவள் தரவில்லை. இதனால் அவளுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை. என் அம்மாவும் அவளுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் இதுகுறித்து கடையில் வேலைசெய்யும் அலெக்ஸ் என்பவரிடம் கூறினேன். உங்களுக்கு தொல்லையாக இருந்தால் உங்கள் குடும்பத்தை கொலை செய்துவிடலாம் அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றார்.

அதன்படி, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலிப்படையைத் தயார் செய்தேன். சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து என் மனைவியை கொல்ல கூலி படையினருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் கதவை திறந்து நேராக மாடிக்கு சென்று மனைவியை கொலை செய்து விட்டனர். ‘அப்போது என் அம்மா இடையில் வந்ததால் அவரை குத்திவிட்டு அவர்கள் தப்பித்தனர். சில நாட்களுக்கு முன்பு அனைவரும் ஊருக்கு சென்றோம். அங்கு வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி தலையில் மட்டும் வெட்டு விழுந்து தப்பித்து கொண்டார். இதை நாங்கள் பெரிதாக்கவில்லை. அங்கு சிசிடிவி கேமிராவில் அந்த சம்பவம் பதிவானது. அதனால் என் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஒரு வாரத்திற்கு முன்பே நீக்கிவிட்டேன் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இந்நிலையில் குமரகுரு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த அலெக்ஸ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like