வாக்கு எண்ணும் மையத்தில் ஜெராக்ஸ் மெஷின்! திமுகவினர் எதிர்ப்பால் பரபரப்பு..

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குஎண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி ஜெராக்ஸ் மெஷின் கொண்டுசெல்லப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 | 

வாக்கு எண்ணும் மையத்தில் ஜெராக்ஸ் மெஷின்! திமுகவினர் எதிர்ப்பால் பரபரப்பு..

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குஎண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி ஜெராக்ஸ் மெஷின் கொண்டுசெல்லப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு மதுரை மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக பாதுகாப்புடன் சீலிடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் உபகரணங்களை வாகனத்தின் மூலமாக அனுமதியின்றி உள்ளே கொண்டுசெல்லப்பட்டது.

இதனைத் தடுத்து நிறுத்திய அமமுக மற்றும் திமுக முகவர்கள் அனுமதி கடிதம் கேட்ட போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர்.இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலர் ஆய்வுக்கூட்டத்தில் இருப்பதாக கூறியதையடுத்து, திமுக வேட்பாளர் சரவணன் மற்றும் திமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சரவணன், "திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே வடமாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படும் நிலையில் தற்போது இது போன்ற நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கவுள்ளோம்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP