தருமபுரி பேருந்தில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கு: தூக்குத்தண்டனை முதல் விடுதலை வரை!

கடந்த 2000ம் ஆண்டு தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில் குற்றவாளிகள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 | 

தருமபுரி பேருந்தில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கு: தூக்குத்தண்டனை முதல் விடுதலை வரை!

கடந்த 2000ம் ஆண்டு தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில் குற்றவாளிகள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.தி.மு.கவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக மாறியது. அ.தி.மு.க.வினர் தீவிர வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

அப்போது அங்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்தை தருமபுரியில் வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது. இதில் பேருந்தில் இருந்து மற்ற மாணவிகள் தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் எனவும் இறந்த மாணவி கோகிலவாணியின் அப்பா வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து, 2003ம் ஆண்டு இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 25 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

தருமபுரி பேருந்தில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கு: தூக்குத்தண்டனை முதல் விடுதலை வரை!

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் குற்றவாளிகள் மூவரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்னர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. 

இதையடுத்து, குற்றவாளிகள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். கடந்த 2011ம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

தருமபுரி பேருந்தில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கு: தூக்குத்தண்டனை முதல் விடுதலை வரை!

இந்த சூழ்நிலையில், குற்றவாளிகள் மூவரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததன்பேரில், குற்றவாளிகள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP