Logo

திருப்பாவை - நிறைவு

திருப்பாவை-30 - சுருக்கத்தின் சுருக்கமாக திருப்பாவையை மறுபார்வையிடுவோம்.
 | 

திருப்பாவை - நிறைவு

சுருக்கத்தின் சுருக்கமாக திருப்பாவையை மறுபார்வையிடுவோம். 

முதல் ஐந்து பாவை நோம்பு ஏன் நோற்ற வேண்டும் என்பதாக

1, நந்தகோபன் யசோதை மகனாக வந்துள்ள நாராயணனை நோக்கி நோம்பு நோற்றால், நாராயணனே நமக்கு முக்தியை அளிப்பார். 

2, நோம்பினை நோர்க்கும் முறை, பால், நெய் போன்ற செழிப்பான உணவுகளைத் தவிர்த்து விட்டு, அவச் சொற்களையும் தவிர்த்து  பரந்தாமன் புகழ் பாடிக் கொண்டே அவன் நினைவில் இருக்கணும்.

3, நிறைவான நீர்நிலையும், வயல்கள் செழித்தும், பசுக்கள் கறக்காமலேயே பால் சொரியும் அளவுக்கு செழிப்புடன் எல்லா மக்களும் வாழ பிராத்திக்க வழிகாட்டுகிறார்

4, ஆழி மழைக் கண்ணா! உன் கருணையை எல்லாம் உன்னால் படைக்கப் பட்ட மக்களுக்கு அப்படியே கொட்டி அருள்வாயாக. இம்முறை கண்ணனுக்கு அன்பாக உத்தரவே பிறப்பிக்கிறார்.

5, நம் கண்ணுக்கும் சிந்தைக்கும் சிக்காமல் மாயம் செய்யும் மாயக்கண்ணனை ஆழ்ந்து உள்வாங்கி, அவனை நினைப்பதும் பாடுவதும் நம்முடைய அநிச்சை செயலாக இருக்கும்படி விரத காலத்தில் இருக்க வேண்டும்.

அடுத்த 10 பாசுரங்களும் உலக இன்பங்களில் மயங்கிக் கிடக்கும் மக்களைத் துயிலெழுப்புவன : 
6, ஐந்தறிவுடைய பறவைகளும், உயிரற்ற வெண்சங்கும் கூட நாராயணனுக்கு கைங்கர்யம் செய்யக் கிளம்பி விட்டன. ஆறறிவுள்ள நாம் இன்னும் அதை நினைக்காமல் உறங்கிக் கிடக்கிறோம். எழுக!

7, பேய்க் குணம் கொண்டு விழிப்புணர்வில்லாமல் கிடப்பவர்களே, ஆயர்கள் கடையும் மத்துச் சத்தம் உங்களுக்கு மேருமலையைக் கொண்டு கடைந்தெடுத்த அமிர்தம் நினைவிற்கு வரவில்லையா?. எழுக!

8, எருமையில் எமன் வரத் தொடங்கி விட்டான். அதாவது வயதாகத் தொடங்கி விட்டது. இன்னும் உறங்கினால் இப்பிறப்பு முடிந்து விடும். மீண்டுமொரு பிறப்பெடுத்து சிரமப்படுவதற்கு இப்பொழுதே கேசவனை நோக்கி நோம்பு நோற்று முக்தியைப் பெறு. எழுக!

9, வாயிருந்தும் பரம்பொருளைப் பாட முடியா ஊமை போல, காதிருந்தும் நாதன் நாமம் கேட்காமல் செவிடாக இருப்பது போல, விசயம் தெரிந்து விழிப்புணர்வு கொள்ளாமல் உறக்கத்தில் கிடக்கிறாயே. எழுக!

10, கிருஷ்ணன் உன்னிடம் வந்து உன்னை ஆட்கொண்டதாகக் கற்பனையில் மோகித்து மயங்கி உறங்காதே! உறக்கம் என்பது கும்பகர்ணனுக்கும் சாபம். அதைப் பெறுவதல்ல நோக்கம் துளசி கமழும் நாராயணனை நாம் தான் வலிந்து சென்றடையணும். எழுக!

11, உடலிலும் குணத்திலும் சிறப்பாக இருந்தாலும் உலக வாழ்க்கையில் மயங்கிக் கிடப்பது சரியல்ல. உன்னை இத்தனை சிறப்பாகப் படைத்த கண்ணனின் நாமம் சொல்லி அவனைத் தொழுதாலே உண்மை ஆனந்தம் கொள்ள முடியும். எழுக!

12, செல்வம் கொழிக்கும் வீட்டின் செல்லப்பிள்ளையாக இருப்பிணும் எருமை ஒரு நாள் உன்னை வந்து சேரவே செல்லும். எவ்வளவு தூரத்திலிருந்தாலு தாயின் கருணை போல் உன் மீது கருணையைப் பொழிந்து கொண்டிருக்கும் நாராயணனைத் துதிக்காமல் இன்னுமா உறக்கம்? எழுக!

13,  செல்வம் சேரச் சேர அறிவு மழுங்கி விடுகிறது போல? நமக்காகப் பல அவதாரங்களை எடுத்து வழிகாட்டிய ராமன், கண்ணனை துதித்தால் மட்டுமே உன் உலக மயக்கங்களை அழித்து உனக்கு முக்தி கொடுப்பார். எழுக!

14, நற்குணங்களைப் பெற்ற பெண் தான் நீ! நாராயணனை அடைய விரும்புபவள் தான் என்றாலும், முறையான வழிபாடுகள் அவசியம். நோம்பு காலங்களில் சந்நியாசிகள் போல் நாமும் முறையாக வழிபட வேண்டும். எழுக!

15, இத்தனை பேரையும் எழுப்பி, இறுதியாக எல்லாருக்கும் சரணாகதி தான் ஆகச் சிறந்த வழி என்று ஆற்றுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்…

அடுத்த நான்கு பாசுரங்களும் வழிபடும் படிநிலைகள் அல்லது முறைகள்:

16, கோவிந்தனின் இல்லமான கோவிலுக்குள் நுழைந்ததும் கருடாழ்வாரை வணங்கி, இறைவனுக்கான சேவையை நினைவுகூர்ந்து அனுமதி பெறுதல்.

17, கிருஷ்ணரை பள்ளியெழச் செய்யும் முன், அவரது தாய் தந்தை அண்ணன் ஆகியோரை பள்ளியெழச் செய்து அவர்கள் துணையைப் பெறுதல்

18, மகாலட்சுமியின் குலப் பெருமை பாடி, மகிழ்வித்து கண்ணனை நெருங்குதற்கான முதற்படி எடுத்து வைத்தல்

19, கூடிக் களித்திருக்கும் பரம்பொருளுக்கு தாங்கள் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டச் சொல்லி தாயாரிடம் வேண்டுவது.

அடுத்த மூன்று பாசுரங்களும் பரந்தாமனைத் துயிலெழுப்புவதாகும் :

20, முப்பத்து முக்கோடி தேவர்களையும் காக்கும் பிரபஞ்ச நாயகனே! எழுந்திருங்கள் என்று துயிலெழுப்புவதோடு இல்லாமல், தாயார் மகாலட்சுமியிடமும் சொல்லி பள்ளியெழுச்சி பாடுவது…

21, பிரபஞ்ச செல்வங்களுக்கெல்லாம் அதிபதியும், யாராரும் வெல்ல நினைக்கக் கூட முடியாத அஜித்தனுமான பரந்தாமனே உன்னைத் துதித்துப் பாட உன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.பள்ளியெழுந்து அருளுமய்யா!

22, உன்னை மீறி எங்களாலாவது என்பது ஏதுமில்லை என்றுணர்ந்து
அன்பின் மிகுதியால் நின்னைச் சரண்புக நின் வாசலில் வந்து நிற்கிறோம்! மெல்லக் கண் மலரும் போது எங்கள் மீதும் உன் அருள்பார்வை பொழியட்டும்

23, துயிலெழுந்தவுடன் தோன்றும் அழகும், நரசிம்மனைப் போன்ற கம்பீரத்துடன் அவரை அழைத்து வந்து சிங்காசனத்தில் அமரச் செய்வதும்.

24, எழுந்து அமர்ந்திருக்கும் நாராயணனின் பலவகைக் கீர்த்திகளைப் புகழ்ந்து பல்லாண்டு பாடி மரியாதை செய்வது.

அடுத்த நான்கு பாசுரங்களும், நாதனிடம் நாடி வந்ததை அவன் தாள் விண்ணப்பமாக வைப்பது:
25, ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்து, இங்கிருக்கிறாயா அங்கிருக்கிறாயா என்றறியாமல் மாயக்கண்ணனாக இருக்கும் நாராயணனே… எங்களுக்கு முக்தியைத் தந்தருள்க! நாங்கள் நித்யசூரிகள் போல அங்கேயும் உன் புகழ் பாடியே  களித்திருப்போம்.

26, பிரபஞ்சத்தின் பெரிய மாலே! நின்னுடன் இருக்கும் சங்கு, சக்கரம், கருடன், ஆதிசேஷன் போன்றோர் உனக்கு ஏவல் செய்யும் பாக்கியம் போல எங்களுக்கும் சேவை செய்யும் அருள் புரிவாயாக!

27, நின்னை வேண்டி நீ கொடுக்கும் முக்தி உறுதியென்று தெரிந்தபின்னே தான் எங்கள் நோம்பினை முடித்து, இயல்பான உணவையும் உலக வாழ்க்கையையும் அனுபவிப்போம்.

28, நாராயணா! உன் படைப்புகளையும் அதன் விஸ்தீரணங்களையும் கொஞ்சம் அறியாத மூடர்கள் நாங்கள். அன்பின் மிகுதியால் நின்னை ஏதேனும் மரியாதைக் குறைவாகப் பேசியிருந்தாலும் பெரிது படுத்தாமல் எங்களுக்கு முக்தியைக் கொடுப்பாயாக!

 

இறுதியான இரு பாசுரங்களும்  இந்த நோம்பின் நோக்கம் என்னவென்று இறைவனுக்கே தொகுத்துச் சொன்னதாகவும்.
திருப்பாவையின் பெருமையும் பலனையும் படிப்பவர்களுக்குச் சொல்வதாகவும் அமைந்தது.

29, தினமும் காலையில் எழுந்து இப்படி நின்னைத் தொழுதற்கான காரணம், எங்களுக்கு மீண்டும் பிறப்பில்லாமல், உனக்குச் சேவை செய்ய உன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டுவதே!

30, திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துக் கொடுத்த மாதவனான கேசவனை, பாவை நோம்பு நோற்று முக்தி வேண்டிய பாடல்களைப் பாடியவர், ஸ்ரீ ஆண்டாள்.
பெரியாழ்வாரால் நாராயணன் புகழ் கற்ற ஆண்டாள் நமக்கும் திருமாலின் திருவடியில் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும் வழியை திருப்பாவையாகக் கொடுத்துள்ளார். இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் படித்து அதன்படி நோம்பு நோற்று வந்தால், திருமாலில் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

கோதை நாச்சியார் திருவடிகளே போற்றி!
நாராயணன் புகழைப் பாட அருள் செய்த நாராயணன் தாளே போற்றி! போற்றி!


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் 
      திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி 
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப் 
      பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே 
      இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் 
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP