மத்திய பட்ஜெட் நடுத்தர மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ப.சிதம்பரம்

2019-20 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டால் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 | 

மத்திய பட்ஜெட் நடுத்தர மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ப.சிதம்பரம்

2019-20 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டால் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி நிலை அறிக்கை ஓர் ஆய்வு என்கிற தலைப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார். 

அப்போது, "நிதி அமைச்சராக இருந்த போது தமிழில் நிதி நிலையை அறிக்கையை அளிக்க ஆசைப்பட்டேன். ஆனால் நாடாளுமன்ற விதிகளில் அவ்வாறு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை திருச்சியில் படித்த மாணவி வாசித்தது திருச்சிக்கு பெருமை. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதி நிலை அறிக்கையை வாசிக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புதிய பார்வை, மாறுபட்ட சிந்தனை, பெண்ணின் பார்வை ஆகியவை அதில் வர வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பங்கு சந்தை உயரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் 2018-19 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையை போன்றே 2019-20 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையும் மந்த நிலையிலேயே இருந்தது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் காலாண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஆட்சியின் இறுதி காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்தது. அது குறித்து நிதி நிலை அறிக்கையில் நிர்மலா சீத்தாராமன் பேசவில்லை.

இந்திய பொருளாதார வளர்ச்சியை அவர் பார்த்திருந்தால் பல கசப்பான உண்மைகள் தெரிந்திருக்கும். ஆண்டுக்கு பத்தாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலையின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.

தொழில் உற்பத்தி துறையில் வளர்ச்சி இல்லை. புதிய முதலீடு குறைவு, புதிய தொழில்நுட்பம் குறைவு, செய்முறைகள் இல்லை, தயாரிப்பு குறைவு, சந்தை வளர்ச்சி இல்லை, மேலும், கடந்த நான்காண்டுகளாக தொழில் உற்பத்தி துறை நொண்டி கொண்டு இருக்கிறது. 

2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வரி வருவாயாக 14 லட்சத்து 84 ஆயிரத்து 406 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி குறைவாகவே வரி வருவாய் கிடைத்துள்ளது.

வேலையின்மை குறித்து நிதி அமைச்சர் சிந்திக்கவில்லை. நிதி நிலை அறிக்கையில் வேலையின்மை விகிதம் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள்.

நிதி நிலை அறிக்கை என்பது வெறும் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வது அல்ல, அது சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. ஆனால் அதிலிருந்து நிதி அமைச்சர் விலகி விட்டார். அதனால் இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் என்கிறேன்.

ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் ஐந்தாண்டுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கமிட்டி அமைக்க போகிறோம் என்கிறார். எதில் முதலீடு செய்ய போகிறோம் என கூறாமல் கமிட்டி அமைக்க போகிறோம் என கூறுகிறார்.

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு 42 சதவீதத்தை பிரித்து தருவார்கள்.ஆனால் 2019-20 ஆம் நிதி ஆண்டுகளில் 42 சதவீதம் பிரித்து தரப்போவதில்லை வெறும் 33 சதவீதம் தான் பிரித்து தரப்போகிறார்கள் என தெரிகிறது. இதை ஆராய்ந்து உண்மையாக இருந்தால் இதை கண்டித்து மாநில அரசுகள் குரல் எழுப்ப வேண்டும்

எல்லாருடைய தேவையையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் பலவீனமானவர்களை திருப்தி படுத்த வேண்டும். பல திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அடித்தட்டில் உள்ள 20 சதவீத மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அவர்களை மத்திய அரசு மறந்து விட்டது. நடுத்தர மக்களும் இந்த பட்ஜெட்டால் மிகப்பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலை தற்போது உள்ளதை விட இந்த ஆண்டு முடிவதற்குள் கடுமையாக உயரும்.

தங்கம், வெள்ளி, பத்திரிகை தாள், புத்தகம் இறக்குமதி, கார்கள், கார் உதிரி பாகங்கள், மார்பில் உள்ளிட்ட நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தி உள்ளார்கள். இது நடுத்தர மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இதை கண்டிப்பது தவிர வேறு வழியில்லை.

அதனால் தான் உப்பு சப்பு இல்லாத இந்த பட்ஜெட்டை மக்கள் மறந்து விட்டார்கள். இந்த நிதி நிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு  சரியான அடித்தளத்தை அமைக்கவில்லை.

பெட்ரோல், டீசல், மின்சாரம், ஆல்கஹால் போன்றவற்றை ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP