Logo

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுவோம்: பாமக தலைவர்

அதிமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது என்றும் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுவோம் எனவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுவோம்: பாமக தலைவர்

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுவோம் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சியின் தலைவர் ஜிகே மணி, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு உரிய பங்கை கேட்டுப் பெறுவோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து விட்டு ஏமாற்றமடைந்துள்ளனர். அதனால் தான் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் வாக்களித்தனர். எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெறச் செய்வார்கள். வாக்குப்பதிவு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க  வேண்டும் என்று திமுக ஆட்சியில் இருந்தபோது நடவடிக்கை எடுக்காமல்  தற்போது கூறுகிறார்கள். எனினும் இந்த முறை வந்தால் நல்லது என்பது தான் பாமக.வின் கருத்தாகும்.

ரஜினி-கமல் இணைவது குறித்து செய்திகள் மட்டுமே வந்துள்ளது. அது நடக்கும்போது பார்த்துக் கொள்வோம். பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல் திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும். அவ்வாறு பிரித்தால் தமிழகம் வளர்ச்சி அடையும் வகையில் அரசின் நலத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும்.

வரும் ஜனவரி 4 ஆம் தேதி பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் திருவிழா மாநாடு நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் பெண்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். மத்திய அரசு, மாநில அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது குறித்தும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு நிறைவு உரையாற்றுகிறார்.

இதற்கு முன்னதாக வரும்  டிசம்பர் 29 ஆம் தேதி திருச்சியில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழகம் உரிமையை இழந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வாழை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால்  திருச்சியில் பெரிய அளவிலான விற்பனை வளாகம் ஒன்றை தொடங்கவேண்டும்" என வலியுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP