விடுமுறை அளிக்காத ஐ.டி., தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்:சத்தியபிரதா சாஹூ

மக்களவை தேர்தலையொட்டி ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அளிக்காத ஐ.டி., மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
 | 

விடுமுறை அளிக்காத ஐ.டி., தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்:சத்தியபிரதா சாஹூ

மக்களவை தேர்தலையொட்டி ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அளிக்காத ஐ.டி., மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் இதுவரை 138.57 கோடி ரூபாய் பணமும், 1022 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பண புழக்கம் இருப்பதாகவும், பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

ஆனால், சோதனை நடைபெற்ற இடத்தில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது தொடர்பாக கனிமொழி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படவில்லை. பெறப்படும் புகார்களை வைத்தே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் தலைமை செலவின பார்வையாளர் மது மகாஜன் நாளை  தேர்தல் பணிகளை பார்வையிடவே தமிழகம் வருகிறார். ஆண்டிப்பட்டி சோதனை வருமான வரித்துறையால் நடத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான முதல்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. அது தொடர்பான முழு அறிக்கை பெற்றவுடன் விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஐ.டி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை மீறும் நிறுவனங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நாளை 30 ஆயிரம் வாக்கு சாவடி மையங்களில் வெப்- கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடைப்பெறும் போது பிரச்னைகள் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 160 கம்பெனி துணை இராணுவ படையினர் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் வாக்கு பதிவுகள் குறித்த தகவல் அளிக்கப்படும். மதுரையை பொறுத்தவரை இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் அதன் பின்னும் மக்கள் வரிசையில் காத்திருந்தால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்

பதட்டமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.  24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அதேப்போல் மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். தேர்தலில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம். எனவே அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP