ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்காதே: தமிழக அரசுக்கு ராம. கோபாலன் எச்சரிக்கை!!!

கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 | 

ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்காதே: தமிழக அரசுக்கு ராம. கோபாலன் எச்சரிக்கை!!!

கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா? கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

நமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், ஆலயங்கள் ஆயிரமாயிரம் காலத்திற்கு நீடித்து இருந்து, திருவிழாக்கள், பூஜைகள் நல்லமுறையில் நடைபெற தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, சுவாமியின் பெயருக்கு எழுதி வைத்தனர். இதனை நிர்வகித்து வந்த தர்மகர்த்தாக்களின் பேரில் குற்றச்சாட்டை சுமத்தி, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களையும் சொத்துககளையும் எடுத்துக் கொண்டது. சொத்துக்களை பட்டாப்போட்டு கொடுக்க அரசாணை வெளியிட்டதன் மூலம், கொடையாளர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறது தமிழக அரசு.
ஆனால், இத்தனை ஆண்டுகள் நிர்வகித்த, இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் என்ன?

இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள கணக்கின்படி, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போயிருக்கின்றன. பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளன. பல பழமையான பஞ்சலோக சுவாமி திருமேனிகள், விக்கிரகங்கள் களவாடி கடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் உடந்தையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர் என்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். சுவாமி விக்ரகங்கள் மீட்கப்பட்டும் வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்ய தகுதியற்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

இந்து சமய அறநிலையத்துறை எந்தவொரு கோயிலையும் கட்டவில்லை, மேலும் அதன் அதிகாரிகள்கூட தங்களது எந்தவொரு சொத்தையும் கோயிலுக்கு அளித்ததில்லை. தருவதெல்லாம் பக்தர்கள் தான், சுருட்டுவது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான். ஓரிரு மாதங்களுக்கு முன்னர், கோயில் சொத்துக்களை வைத்துள்ளவர்களுக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ள இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. திட்டமிட்டு, கோயில் சொத்துக்களை விழுங்க நடக்கும் சதியாக இப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை அடிக்கவே இந்த அரசாணை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சம்மதத்தோடு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அந்த சொத்துக்களை பட்டாப்போட்டு வழங்கப்போவதாக கூறியுள்ளது. இது எப்படியிருக்கிறது என்றால், திருட்டுக்கு உடந்தையானவர்களின் சம்மதத்துடன், திருடனிடமே பொருளை கொடுப்பதுபோல் உள்ளது அரசின் நடவடிக்கை. பல கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை, இந்து முன்னணி போராடி மீட்டுக்கொடுத்துள்ளது. மேலும், தொடர்ந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது.

கோயில் சொத்து குலநாசம் என்பதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதனை நேரிலும் காண்கிறோம். கோயில் சொத்து கோயிலுக்கு, கோயில், இந்துக்களின் சொத்து. கோயிலையும், கோயில் சொத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். சென்ற மாதம் நடைபெற்ற இந்து முன்னணியின் மாநில செயற்குழுவில் இதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வருகின்ற திங்கள் கிழமை (4.11.2019) அன்று அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரிடம், பக்தர்களின் சார்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையை ஆட்சேபித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளது.

எனவே, தமிழக அரசு, கோயில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாப்போட்டு கொடுக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி, பக்தர்களின் ஆதரவோடு வீதியில் இறங்கிப்போராடுவதோடு, சட்டரீதியான போராட்டத்தையும் நடத்தி இதற்கு முடிவு கட்டியே தீரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP