சிறுமி ஹாசினி கொலை வழக்கு: குற்றவாளி தஷ்வந்தின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைப்பு!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளியான தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: குற்றவாளி தஷ்வந்தின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைப்பு!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளியான தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017 பிப்ரவரி 6ல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயையும் கொலை செய்தான். இந்த வழக்கில், தஷ்வந்த் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்ததுடன்  தூக்குத்தண்டனை வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம். 

இதை எதிர்த்து, தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி நடைபெற்ற   மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும், குற்றவாளி தஷ்வந்த்தின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.  

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் தஷ்வந்த் மீது குற்றம் உறுதியாகியுள்ளது.உச்ச நீதிமன்றமும் இதனை ஏற்கிறது. தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக மனுவை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அவருக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே இந்த மனுவை பரிசீலனை செய்வதற்கு காரணம்" என்று கூறினர். 

மனுதாரரின் வாதத்திற்கு பிறகு,  தஷ்வந்தின் தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது தொடர்பாகவும், தங்களது கருத்துக்களை கூறும்படியும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP