கள்ளச்சாராய பாக்கெட் ; வாயில் ஊறுகாய் - போஸ் கொடுக்கும்  அரசு பள்ளி மாணவர்கள்!!

சேலம் மாவட்டம் , ஆத்தூரில், பாட புத்தகங்களை பிடிக்கும் கைகளில் கள்ளச்சாராய பாக்கெட், வாயில் ஊறுகாய் என்று போஸ் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 | 

கள்ளச்சாராய பாக்கெட் ; வாயில் ஊறுகாய் - போஸ் கொடுக்கும்  அரசு பள்ளி மாணவர்கள்!!

சேலம் மாவட்டம் , ஆத்தூரில், பாட புத்தகங்களை பிடிக்கும் கைகளில் கள்ளச்சாராய பாக்கெட், வாயில் ஊறுகாய் என்று போஸ் கொடுக்கும்  அரசு பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மதுவால் எழை, எளிய குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளையும் கள்ளச்சாராயத்தையும் முற்றிலுமாக ஒழித்து, மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தும் தீர்வு காணப்படாமலே இன்றளவும் உள்ளது இந்த மது பழக்கம்.

இதனிடையே ராஜாஜி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்திப் பார்த்து, அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டபின் சென்னை மாகாணம் முழுவதற்கும் அமல்படுத்தினார். கள்ளுக்கடைகளை ஒழித்ததனால் ஏற்பட்ட அரசு கஜானாவின் வருமான இழப்பை, விற்பனை வரி மூலம் ஈடுகட்டினார்.

அரசாங்கத்துக்கு வருமானம் என்பதைவிட, இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பெரிதாக எண்ணிய தலைவர்கள் இருந்த காலம் அது. அண்ணாதுரை முதலமைச்சரான போது, கள், சாராயக் கடைகளைத் திறப்பதன் மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மறைவுக்குப் பின் மீண்டும் கள், சாராயக் கடைகளைத் திறந்து விடும் ஏற்பாடுகள் நடந்தன. வயதாகி, உடல் நிலை முடியாமல் வீட்டில் இருந்த ராஜாஜி இதையறிந்து பதறிப்போனார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, "ஒரு தலைமுறை மக்கள் மறந்து போய்விட்ட இந்த பாழாய்ப்போன குடியை மீண்டும் கொண்டு வரவேண்டாம். ஏழை எளியவர்களை அழிக்கும் இந்தக் கொடுமையால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இதனால் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்களைக் கண்டு பிடிப்பதே சரியானது" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்.

ஆனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளிக்கப்படாமல், மது மீண்டும் நுழைந்தது. மது மூலம் அரசுக்கு வருவாயும் அதிகரித்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் 183 கோடி ரூபாயாக இருந்தது. 2012-13 ம் ஆண்டிலோ 21,680 கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைத்தது.முதலில் தயங்கி தயங்கி குடிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் குடிப்பதே சமூக அந்தஸ்து என்கிற நிலை உருவானது.

1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26. ஆனால் 2007ல் அது 17 ஆகக் குறைந்தது. 'அசோசெம்' என்கிற வர்த்தகக் கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், '1926 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது' என தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 'டீன் ஏஜ்' பிரிவினரின் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் குடிக்கு ஆட்பட்டவர்கள். இதில் வளர் இளம் பருவத்தினரையும் சேர்த்தால் 2 கோடியை எட்டும். இதனால் மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகன் குறித்தும், பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனைப் பற்றியும், போதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்கள் குறித்தும் செய்திகளை காண்கிறோம். இப்போது குடி இல்லாத நிகழ்ச்சிகளையே பார்க்க முடியவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணம். குடும்ப வன்முறை அதிகரிப்பதற்குக் காரணமும் குடிப்பழக்கமே. பிறந்தநாள், திருமணநாள் என்றில்லாமல் மரண நிகழ்வுகளில் கூட குடிக்கு இடமிருக்கிறது.

மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் விளக்கி புள்ளி விபரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து காய்ச்சப் படும் கள்ளச்சாராயம் லாரி டியூப்கள் மூலம் சிறுவாச்சூர் மற்றும் ஊனத்தூர் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு தலைவாசல் வீரகனூர் , கெங்கவல்லி, செல்லியம் பாளையம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலில் பாக்கெட்டுகளை வியாபாரிகள் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

 இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கல்வராயன் மலைப்பகுதி சேலம் மாவட்ட எல்லையிலும் விழுப்புரம் மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ளதால் இரு மாவட்ட போலீசாரின் எல்லைப்பிரச்சனையால் சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர். 

இதனிடையே அதிக அளவில்  நடக்கும் சாராய விற்பனையை நிருபிக்கும் வகையில் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் தனது இரு கைகளிலும் சாராய பாக்கெட் மற்றும் வாயில் ஊறுகாய் பாக்கெட்டுடன் போஸ் கொடுக்கும் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்களை பிடிக்கும் கைகளில் கள்ளச்சாராய பாக்கெட்டும் வாயில் ஊறுகாயுடன் போஸ் கொடுக்கும் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, எனவே மதுவை தமிழக அரசு தடுக்காவிட்டாலும் பெற்றோர்களும் தனது பிள்ளைகளை அக்கறையுடன் கண்காணித்து வரவில்லையென்றால் மாணவர்கள் மதுவால் சீரழியும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP