ரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

தண்டவாள பராமரிப்பு பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 262 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு மட்டுமே திருச்சி ரயில்வே கோட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்புக்கான 262 காலி பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு மட்டுமே பணி ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு ரெயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வடமாநிலத்தினரே அதிகம் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். திருச்சி கோட்ட ரெயில்வேயிலும் வட மாநிலத்தினர் அதிகம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தண்டவாள பராமரிப்பு பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களில் 262பேருக்கு திருச்சி கோட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. பணி நியமனத்திற்காக அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சி ஜங்ஷனில் ரெயில்வே திருமண மண்டபத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது.

இதில் பெரும்பாலானோர் வட மாநில இளைஞர்களாக காணப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்தனர். சான்றிதழ் சரிபார்த்த பின் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தில் கேட்டபோது, “திருச்சி கோட்டத்தில் என்ஜினீயரிங் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணியில் காலியாக உள்ள 262 பணியிடங்களுக்கு புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் கேரள மாநிலத்தினர். மற்றவர்கள் அனைவரும் பீகார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்" என்றனர்.

திருச்சி கோட்ட ரெயில்வேயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பணி நியமனத்திலும் வட மாநிலத்தினரின் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் வட மாநிலத்தினர் அதிக அளவில் பணியில் சேர்ந்துள்ளதால் அவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உள்ள சூழலில் இது போன்ற தமிழகத்தில் உள்ள  பணியிடங்களுக்கு கூட தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காதது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP