20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது!

20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரள இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த கேரள இளைஞர் கைது!

20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரள இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ரேவதி, இதற்கு முன்பு கோவை புதூர் பகுதியில் பொட்டிக் கடை நடத்தி வந்திருக்கிறார்.

பொட்டிக்கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்தபோது தான், 15 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் அவருடன் படித்த கேரளாவை சேர்ந்த ஜிதின்ஷா என்பவர் இன்ஸ்ட்டாகிராம் மூலம் ரேவதியுடன் நட்பு கொண்டுள்ளார். 

அப்போது, மன வேதனையில் இருந்த ரேவதியும் தனது குடும்ப சூழ்நிலை, விவாகரத்து வழக்கு, தொழில் நஷ்டம் ஆகியவ்ற்றை ஜிதின்ஷாவிடம் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலம் பேசி  பழகிய நிலையில், ஜிதின்ஷா  தனக்கு இன்னும் திருமணமாகவில்லை எனவும்  ரேவதியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் ரேவதியை கோவைக்கு வந்து நேரில் சந்தித்த ஜிதின்ஷா திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் ரேவதி ஆரம்பத்தில் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் ஒரு வழியாக ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த ஜித்தின்ஷா, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மறுத்த ரேவதி, ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என்று ஜித்தின்ஷாவின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். ரேவதியை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்ட ஜிதின்ஷா, அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்காக ஏஜெண்டிற்கு 10 லட்சம், விசாவிற்கு 2 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறி, ரேவதியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  7 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.  ரேவதியின் கிரிடிட் கார்டையும் வாங்கி அதனையும் பயன்படுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், ரேவதியின் முகநூலில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். அது வேறு யாரும் இல்லை, அமெரிக்காவில் வசிக்கும் ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கப் என்பவர் தான். அவர் ரேவதியை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு தான் ஜிதின்ஷாவின் மனைவி என்றும், ஜிதின்ஷா இது போல பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் தான் அவரை விட்டு பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரேவதி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து ஜிதின்ஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு நேரில் வந்து பதில் கூறுவதாக கூறிய ஜிதின்ஷா, கடந்த மாதம் ரேவதியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது ரேவதி தனது பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற ஜிதின்ஷா, அதன் பின்னர் ரேவதியின் போன் கால்களை எடுக்கவில்லை.

அப்போது, மீண்டும் ரேவதியை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கம், ஜித்தின்ஷா பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், விரைவில் துபாய் செல்ல இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதையடுத்து ரேவதி கோவை மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார்,  ஜித்தின்ஷாவை தேடி வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் சின்னுஜேக்கப், ஜித்தின்ஷா ஆழப்புலாவில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் செல்வதாகவும், அங்கிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல இருப்பதாகவும் ரேவதிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரேவதி குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உஷார் அடைந்த போலீசார், கடந்த 31ஆம் தேதி காலை மதுக்கரை அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை வழி மறித்து, அதில் இருந்த ஜித்தின்ஷாவை மடக்கி பிடித்து, அவர் மீது கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 3  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை சிறையில் அடைத்தனர்.  

இது குறித்து பேசிய ரேவதி, ஜிதின்ஷா தன்னுடைய செல்போனில் இருந்து அவரது மனைவி சின்னுஜோக்கப் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி இருந்ததாகவும், அறிமுகமே இல்லாத ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி இருப்பதை அறிந்த சின்னுஜேக்கப் தன்னை தொடர்பு கொண்ட போதுதான், ஜிதின்ஷாவிற்கு திருமணம் ஆன விஷயமே தெரியும் எனவும் ரேவதி தெரிவித்தார். மேலும், தன்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஜிதின்ஷா  ஏமாற்றி பணம் பறித்ததுள்ளதாக தெரிவித்த ரேவதி, தனக்கு முன்னர் ஒரு பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய்  பணத்தை வாங்கி கொண்டு ஜிதின்ஷா மோசடி செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP