குடிநீர் குழாயில் மனித கழிவுகள்: பேரூராட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

சேலம் வீரகனூர் பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள், பேரூராட்சி செயல் அலுவலரை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

குடிநீர் குழாயில் மனித கழிவுகள்: பேரூராட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

சேலம் வீரகனூர் பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள், பேரூராட்சி செயல் அலுவலரை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம் வீரகனூர்  பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதிக்கு மேட்டூர் – ஆத்தூர் கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் மற்றும் மனித கழிவுகள் கலந்து வருவதாகவும், இதை குடிப்பதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்றும், கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலைமறியல் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செயல் அலுவலர் சண்முகசுந்தரி பொதுமக்களை சமரசம் செய்ய முயற்சித்த போது பெண்கள் செயல் அலுவலருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களிடமிருந்து செயல் அலுவலரை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது போலீஸ் வாகனத்துடன் செயல் அலுவலரை சிறைபிடித்து கொண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்பு செயல் அலுவலரை குடிநீர் குழாயில் கழிவு நீர் கலக்கும் பகுதிக்கு அழைத்து சென்று காண்பித்தனர். அதனை கண்ட அதிகாரி குடிநீர் குழாயை சரி செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த மறியல் போராட்டத்தால் ஆத்தூர் – பெரம்பலூர் செல்லும் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP