தண்ணீர் தொட்டிகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்!

மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவி வருவதால், வனத்தின் எல்லையோரங்களில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.
 | 

தண்ணீர் தொட்டிகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்!

மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவி வருவதால், வனத்தின் எல்லையோரங்களில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. 

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இவ்வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான், செந்நாய் என ஏராளமான வன உயிரினங்கள் இருந்தாலும், இங்கு யானைகளின் எண்ணிக்கையே மிக அதிகம்.

இவ்வாண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப்போன காரணத்தினாலும், கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வன உயிரனங்களின் தாகம் தீர்க்க உதவும் வன குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் வறண்டு வருகின்றன.

இதனால், தண்ணீர் தேடி அலையும் சூழலில் வன உயிரினங்கள் உள்ளன. மான் உள்ளிட்ட சிறிய விலங்கினங்கள் கிடைக்கும் குறைந்த நீரை கொண்டு ஓரளவு சமாளித்து வரும் நிலையில், உயிர் வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இருநூறு லிட்டர் தண்ணீராவது தேவை என்ற நிலையில் உள்ள யானைகளின் நிலையே பரிதாபமானது. இவை கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அலைமோதுகின்றன.

இது போன்ற வறட்சி காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வேறு வழியின்றி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுவதால் பயிர் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.  இதனை தவிர்க்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் வன எல்லைகளில் 15 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து வனத்துறை பராமரித்து வருகிறது.

தினசரி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தனது நுகர்வு திறனால் தண்ணீர் நிரம்பியுள்ள தொட்டிகளின் திசையை அறிந்து கொள்ளும் யானைகள், அவற்றை நோக்கி தாகம் தீர்த்துக்கொள்ள படையெடுத்து வந்தபடி உள்ளன.

பிரமாண்ட உருவம் கொண்ட யானைகள்  தங்களது குட்டிகளோடு பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து நீர் நிரப்பட்ட தொட்டியினை சூழ்ந்து நின்று தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் கூட்டமாக செல்வது காண்போரை வியக்க வைப்பதோடு நீரின் அவசியத்தை புரிய வைப்பதாக உள்ளது.

அதே நேரத்தில், குடும்பமாக வாழும் இயல்புடைய யானைகள் கூட்டம் கூட்டமாக தொட்டிகளில் உள்ள நீரை அருந்த வருவதால், ஒரு சில மணி நேரங்களில் தொட்டியில் உள்ள நீர் தீர்ந்து விடுகிறது. இங்குள்ள யானைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான தொட்டிகள் இல்லை என கூறும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள், தண்ணீர்தேடி ஊருக்குள் நுழையும் யானைகளால் ஏற்படும் கடும் சேதங்களை தவிர்க்க தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், அவற்றை சரிவர பராமரித்து தினசரி இருமுறை தண்ணீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை பெய்யும் போது வெள்ள நீரை வீணாக்காமல் தேக்கி வைக்க மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மட்டும் 5 இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றுவது மட்டுமின்றி போர்வெல் மூலமாகவும், தொட்டிகளில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய தொட்டிகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP