அலைக்கழிக்கும் அதிகாரிகள்; தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளரால் பரபரப்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அலைக்கழிக்கும் அதிகாரிகள்; தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளரால் பரபரப்பு!

 

உடல்நலக்குறைவால் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர் குடும்பத்தினருக்கு உரிய பணபலன்களை அளிக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

60 வார்டுகளை கொண்ட சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் துப்புரவு பணியாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ஜோசப்சேட்டு என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டிய பணப்பலன்களையும் வாரிசு வேலையையும் வழங்காமல் அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

லஞ்சம் கேட்டு தங்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் சுமார் 80 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தினருக்கு உரிய பண பலன்களை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP