1. Home
  2. தமிழ்நாடு

ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்!  சிசிடிவி கேமிராவில் சிக்கினார்!

ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்!  சிசிடிவி கேமிராவில் சிக்கினார்!

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, மகர ஜோதி தரிசனத்திற்காக தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் ஐயப்ப பக்தர் வேடம் அணிந்து நூதன முறையில் திருடிய போலி பக்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில், கேகே நகர், அசோக்நகர், நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சபரிமலைச் செல்வதற்காக பிரசித்திப் பெற்ற கோயில்களில் இருமுடி கட்டும் நிகழ்வில் 47 வயதான செந்தில்குமார் எனும் போலி பக்தர், தனக்கு தானே மாலை அணிவித்துக் கொண்டு, இருமுடி கட்டுபவர்களிடையே உலா வந்துள்ளான்.

இந்நிலையில், சென்னை கேகே நகரிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த செந்தில்குமார், கோயிலில் சுற்று முற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டுக் கொண்டு, முத்துமாரியப்பன் என்பவருக்கு இருமுடிக் கட்டும் போது அவரது குடும்பத்தினர் தாங்கள் கொண்டு வந்திருக்கும் உடைமைகளை கவனிக்காமல் இருமுடிக் கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த செந்தில்குமார், அதிலிருந்த கைப்பை ஒன்றைத் தூக்கி கொண்டு நைசாக நழுவிச் செல்வது கேமிராவில் பதிவாகியிருந்தது.

அந்தக் கைப்பையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன் உட்பட விலையுயர்ந்தப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக காணாமல் போன பை குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைப்பையில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து செந்தில் குமாரை பின்தொடர்ந்த தனிப்படை போலீசார் நெசப்பக்கம் அருகே ஒரு கடையில் வைத்து மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர், செந்தில்குமாரை தீவிரமாக விசாரித்ததில், கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணத்தைத் திருடிக் கொண்டு சென்றது, தங்க நகைகள் திருடியது, நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் செந்தில்குமார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், தனது 3 வது மனைவியை எரித்துக் கொன்ற வழக்கிலும் மதுரவாயல் காவல்துறையினரால் செந்தில்குமார் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
திருமணங்கள், விசேஷ இடங்கள், கோயில்கள் என்று அதிகளவில் கூட்டமாக இருக்கும் இடங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நல்லவர்களைப் போல பேசி திருடும் கும்பல் போலி ஐயப்ப பக்தர்களாக உலாவி வருகிறார்கள் என்று போலீசார் கூறினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like