தமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

தமிழ், ஆங்கில மொழிகளில் கோயில் கல்வெட்டுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில்,"தமிழகத்தில் பல பழமையான கோயில்கள் உள்ளன. அவற்றில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் கோயில்களின் சிறப்பு, வரலாறு குறித்தும், அப்போதைய காலகட்டத்தில் நடைபெற்ற போர்கள், சமாதான உடன்படிக்கைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. இவற்றை மக்கள் அறியும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிட்டால் தமிழர்களின் வரலாறு குறித்து, தற்போதைய தலைமுறையினர் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். 

மேலும், கல்வெட்டுகளில் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளதால், அவற்றை அறிந்து கொள்வதன் மூலம், சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும், அது வாய்ப்பாக அமையும்.

தமிழர்களின் வரலாறு 3000 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில், கோயில் கல்வெட்டு தகவல்களை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிட்டால், அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைவதோடு, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகள் குறித்த அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். 

இது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடவும், அவற்றை கோயில் வளாகங்களில் வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் உரிய முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP