கண்ணனூர் வனப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் உள்ளனவா? ஆய்வு செய்ய உத்தரவு!

கண்ணனூர் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா என மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

கண்ணனூர் வனப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் உள்ளனவா? ஆய்வு செய்ய உத்தரவு!

கண்ணனூர் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா என மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு காப்புக்காடு பகுதி உள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள், சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் அடையாளங்களான கல்திட்டைகள், நெடுங்கற்கள், கல்வட்டங்கள் ஆகியவை இருந்தன.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வனத்துறையினர் இந்த பழங்கால சின்னங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றிவிட்டு, அந்த இடங்களில் யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதுபோன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கிடைக்கும் அடையாளங்களை வைத்து, அக்கால மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அறிய இயலும்.

ஆனால், வனத்துறையினர் பழங்கால சின்னங்களை பாதுகாக்காமல் அவற்றை சிதைத்து விட்டனர். இதுதொடர்பாக, நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டினை ஏற்படுத்துவதாக அமையும்.

ஆகவே, தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள், யூகலிப்டஸ் மரக்கன்றுகளை நட தடைவிதிக்க வேண்டும். மேலும், கண்ணனூர் பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதிகளுக்குள் எடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும், கண்ணூர் பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் "தமிழர்களின் பாரம்பரியம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது ஆதிச்சநல்லூர், கீழடி, புளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு  பொருட்கள் மூலம் தெரிய வருகிறது.

இருப்பினும், அவற்றின் பெருமையை உணராமல் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க தொடர்ந்து தவறி வருகிறோம். ஹரியானாவில் இரண்டாவது மொழியாக இருந்த தமிழ் தற்போது நீக்கப்பட்டு விட்டாலும் பல்வேறு நாடுகளில் தமிழ் தற்போதும் இரண்டாவது மொழியாக உள்ளது.

ஆகவே தமிழர்களின் பழமையையும், பெருமையையும் கருதி நம்முடைய பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்கும் அடையாள சின்னங்களை பாதுகாக்க முயல வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து,  புதுக்கோட்டை கண்ணனூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மத்திய மாநில அரசுகளின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவற்றில் ஏதேனும் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

மேலும் கண்ணனூர் வனப்பகுதியில் வனத்துறையினரால் அகற்றப்பட்ட நடுகற்கள் உள்ளிட்ட பழம்பொருட்களின் விவரங்களை தாக்கல் செய்வதோடு அவற்றை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் அமைக்க  வனத்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP