உஷார்!! ஆன்லைன்ல பிரியாணி ஆர்டர் பண்றீங்களா? மனசை திடப்படுத்திக்கிட்டு இதை கொஞ்சம் படிங்க!

பிரியாணி ஆர்டர் செய்த கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
 | 

உஷார்!! ஆன்லைன்ல உணவு ஆர்டர் பண்றீங்களா?

தமிழகம் மட்டுமல்லாமல், உலகம்  முழுவதுமே செல்போன் மயமாகி விட்டது. ஏதோ நமது விரல் நுனியில் தான் உலகம்  சுழன்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். வீட்டை விட்டு வாசல்படிக்கு இறங்கியதுமே ஊபர், ஓலாக்களால் நிரம்பியிருக்கிறது நமது பயணம். இயந்திரத்தனமாக மாறிவிட்ட இந்த வாழ்க்கை முறைகளில், வாரத்தில் நான்கைந்து நாட்களுக்கு சமையலே நகர் முழுவதும் நிரம்பி வழிகிற உணவகங்களின் தயவில் தான் பல வீடுகளில் சென்றுக் கொண்டிருக்கிறது.

வார இறுதிகளில் சாலைகள் முழுவதும், சோமாட்டோ, ஸ்விக்கீ, ஊபர் என இரு சக்கர வாகனங்களில் கலர் கலராய் பனியன் போட்டுக் கொண்டு விறுவிறுவென யாருக்கோ சாப்பாடு கொண்டுச் செல்பவர்களால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. ஆனால், இப்படி ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்பவர்கள் அதன் தரத்தைப் பற்றியெல்லாம் கவலைபடுகிற மாதிரி தெரியவில்லை. அப்படி தான் சீனிவாஸ் எனும் நபர் சிக்கிக் கொண்டார். 

இவர் சோமாடோவில் அதிக பசி காரணமாக வார இறுதி நாள் ஒன்றில், பிரியாணி ஆர்டர் செய்திருக்கிறார். பின்னர் ஆர்டர் செய்த பிரியாணிக்காக ஆசையுடன் காத்திருந்தார். அதன் பின் பிரியாணி வீட்டிற்கு வந்ததும், அதனை பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வாயில் ஏதோ ஒரு பொருள் குறுக்கிட்டதை உணர்ந்து அதனை வெளியே எடுத்து பார்த்தார்.

அந்த பொருள் ஒரு இரும்பு கம்பி எனவும் அது தான் உணவில் இருந்து அவரது வாய்க்குள் சென்றிருக்கிறது என்று அறிந்து, அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் அதை புகைப்படம் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்திலும், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பின்னர், உணவில் இருந்த இரும்பு கம்பி குறித்து, சீனிவாஸ் அளித்த புகாரின் பெயரில் அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகத்தை சோதனை செய்து, அந்த உணவகத்திற்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்தது.

இதை தொடர்ந்து, சோமாடோவில் உணவு ஆர்டர் செய்த காரணத்தினால், அந்த நிறுவனமும் அந்த வாடிக்கையாளருக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்ததோடு அவருக்கு இலவச கூப்பன்களை வழங்கியது. இது ஒரு புறம் இருக்க, இப்படி ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்பவர்களுக்கு அதுவும் குறிப்பாக பிரியாணிகளை ஆர்டர் செய்பவர்களுக்கு  மறைமுகமாக உணவகங்கள் தரம் குறைந்த உணவுகளையே தருகின்றன என்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.

இதற்கான காரணங்களாக அவர்கள் அடுக்கும் விஷயங்களில், மிக முக்கியமானது.. வாடிக்கையாளர்களை உணவகங்கள் நேரில் பார்க்காதது தான். இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு யாரும் சத்தம் போட மாட்டார்கள் என்பது கூடுதல் வசதி. பிரியாணியில், தரம் குறைந்த மட்டன் துண்டுகளோ, வெறும் எலும்புகளுடன் கூடிய துண்டுகளை அடுக்கித் தருவதோ.. அல்லது மீதமாகிப் போன பிரியாணியை சூடு படுத்தி தருவதோ என இந்த உணவகங்கள் செய்கிற தகிடுத்தனங்கள் அதிகம் என்கிறார்கள்.

அதே போல், ஆஃபர் என்கிறப் பெயரில், ஒரே பிரியாணியை இரண்டாகப் பிரித்து இரண்டு பார்சல்களாக அதிக விலைக்கு வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுகிற யுத்தியும் அதிகளவில் இருக்கிறது என்கிறார்கள். இட்லி, தோசை என நான் சுத்த சைவ உணவை தான் ஆர்டர் செய்கிறேன் என்பவர்களுக்கு வேறு வகையான சங்கடங்கள் நேர்கிறது.

ஆறிப்போய், விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் வடைகளை  இப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு தள்ளி விடுகிறார்கள். நேரில் சாப்பிடுபவர்களுக்கு கொடுத்தால், சண்டைக்கு வருவார்கள் என்பதால், ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கென தனியாக மீதமான மாவு பயன்படுத்தி தோசைகளை சுட்டு,  கழிச்சு கட்டும் வித்தையையும் பல ஹோட்டல்கள் கைக் கொள்கின்றன. அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த லிஸ்ட்டில் நகரின் பிரபல உணவகங்கள் அத்தனையுமே இருப்பது தான். 

 

அதனால், இனி ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது இந்த விஷயங்களில் எல்லாம் உஷாரா இருங்க... குறிப்பா வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆன்லைன்ல உணவுகளை ஆர்டர் செய்து தராதீங்க... அது ஆரோக்கியமில்லை என்பது மட்டுமல்ல... ஆபத்தும் கூட!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP