தாய்மொழியை பெரிதும் நேசித்த வி.வி.எஸ்.லக்ஷ்மன்!

ஒரு முறை, அவரிடம் கேட்டேன். ‘‘உண்மை தான். மற்ற மொழியில் பேசும் போது மெனக்கெட வேண்டும். நேர்த்தியான வார்த்தைகளை தேட வேண்டும். மூளைக்கு வேலை இருக்கும். ஆனால், தாய்மொழியில் பேசும் போது, அது சுவாசிப்பதைப் போல இயல்பாக இருக்கும். அது மிகப்பெரிய விடுதலையை கொடுக்கும்’’ என்றார்.
 | 

தாய்மொழியை பெரிதும் நேசித்த வி.வி.எஸ்.லக்ஷ்மன்!

- வி. இராமசுந்தரம் -

இலங்கை அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர், முத்தையா முரளிதரன் தான், வி.வி.எஸ்.லக்ஷ்மனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பார்த்த நொடியே, இவர் பயங்கர ஷார்ப்பான மனிதராக இருப்பார் என்று புரிந்து கொண்டேன். 

எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்ல மாட்டேன். மார்க்கெட்டிங்கில் இருக்கிறவன் சொல்லக் கூடாத தொழில் ரகசியம் அது. அவருடன் தொடர்ந்து பழகிய பிறகு, நான் கனித்தது மாதிரியே அவர் எதையும் நுட்பமாக கவனிக்கும் மனிதர் என்று புரிந்தது.  

யாரையும் பிரித்துப் பார்ப்பது வி.வி.எஸ்.லக்ஷ்மனுக்கு பிடிக்காத விஷயம். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவார். சீனியர், ஜூனியர் என்ற எந்த பாகுபாடும் காட்ட மாட்டார். ஜூனியர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சீனியர்களுக்கும் கொடுப்பார். 

இது விளையாட்டில் மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிப்பார். அவருடன் தொடர்ந்து பழகிய அனுபவத்தில் சொல்கிறேன்; ஹோட்டல் மேனேஜருக்கு கொடுக்கும் அதே மரியாதையைத் தான், பேரரருக்கும் கொடுப்பார். 

நேரம் வீணாவதை எப்போதும் தவிர்ப்பார். புதிதாக ஏதாவது ஒன்றை தினந்தோறும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எப்போதும் இருக்கும். புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற வெறி அவரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் இதுவரை செய்த சாதனைகளுக்கு அதுவே அடிப்படை. 

நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆர்வலர் ஒருவரிடம் பேசும் போது தான் தெரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வி.வி.எஸ்.லக்ஷ்மன் கிரிக்கெட் ஆட வருகிறார் என தெரிந்தால் போதும்; மொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் தொடை நடுங்கி விடும். 

வி.வி. லக்ஷ்மன் மீது, இந்தியர்களுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதற்கு மேலான பயம், ஆஸ்திரேலியர்களுக்கு இருந்தது. ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமல்ல, இலங்கைகாரர்களுக்கும் அந்த பயம் இருந்தது. 

வி.வி.எஸ்.லக்ஷ்மனின் ஆங்கில உச்சரிப்பு, அவ்வளவு அட்சர சுத்தமாக இருக்கும். அவர் மட்டுமல்ல, இந்திய அணி வீரர்கள், கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோரின் ஆங்கில உச்சரிப்பும் அவ்வளவு அழகாக இருக்கும். 

இருந்தாலும், சுந்தரத் தெலுங்கில் யாராவது மாட்லாடினால், அவர் மீது வி.வி.எஸ்.லக்ஷ்மனுக்கு அளவு கடந்த ப்ரியம் ஏற்படும். வெங்கடேஷ் பிரசாத்தோடு அவர் தெலுங்கு பேசும் நிகழ்வே அவ்வளவு அழகாக இருக்கும். தாய்மொழியில் பேசும் போது ஏற்படும் நிம்மதி வேறு எதிலும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். 

ஒரு முறை, அவரிடம் கேட்டேன். ‘‘உண்மை தான். மற்ற மொழியில் பேசும் போது மெனக்கெட வேண்டும். நேர்த்தியான வார்த்தைகளை தேட வேண்டும். மூளைக்கு வேலை இருக்கும். ஆனால், தாய்மொழியில் பேசும் போது, அது சுவாசிப்பதைப் போல இயல்பாக இருக்கும். அது மிகப்பெரிய விடுதலையை கொடுக்கும்’’ என்றார். 

எனக்கு அது உண்மையாகப்பட்டது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்மொழியில் யாராவது பேசுவதை கேட்பதை விட இன்பம் வேறு ஏதாவது இருக்கப்போகிறதா என்ன? 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP