இதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி!

இன்னும் ஏன் இவர் அணியில் இருக்கிறார்... இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், ஒருநாள் போட்டியில் டெஸ்ட் விளையாடுகிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த தோனி, தற்போது அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.
 | 

இதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி!

இன்னும் ஏன் இவர் அணியில் இருக்கிறார்... இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே... ஒருநாள் போட்டியில் டெஸ்ட் விளையாடுகிறாரே... என அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த தோனி, தற்போது அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார். 

தோனி... தோனி என்று ஆஸ்திரேலிய மண்ணில் தோனி ரசிகர்களின் குரல் தான் கடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கேட்டது. எப்போது தோனியின் 'பேட்ட' காலம் தொடங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர். 

திரும்பவும் தோனியை தேர்வு செய்திருக்கிறார்களே என்று ஒரு பக்கம் கேள்விகள் எழுந்தாலும் எல்லோர் மனதிலும் வின்டேஜ் தோனியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டு தான் இருந்தது. சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது தோனியின் கம் பேக் இதுதான் என்று கொண்டாடினோம். ஆனால் அதன் பிறகு அவர் பெரிதாக எந்த போட்டியிலும் ஜொலிக்கவில்லை. 

இந்த நிலை தொடர்ந்த போது டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட்டின் எழுச்சியால் உலக கோப்பையில் தோனியின் இடம் கேள்விக்குறியானது. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனியின் ஆட்டம் தான் அவர் இடத்தை தீர்மானிக்கும் என்ற நிலை உருவானது. 

இதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி!

இந்திய அணி டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றிப் பெற்றது. அதில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போதாக்குறைக்கு இப்போதைக்கு இருக்கும் மோஸ்ட் எண்டெர்டெயினர் என்ற பெரிய பட்டமும் பண்ட் பக்கம் சென்றுவிட்டது. 

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் தொடர் என்பதையும் தாண்டி... உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற போகும் வீரர்களை தேர்வு செய்யும் தொடராகவே இது கருதப்பட்டது. 

இப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் தான் இருந்தது. ஆனால் இந்திய ரசிகர்கள் நிம்மதிக்கொள்ளும் வகையில் ஒன்று நடந்தது. அது தோனியின் ஆட்டம். நடுவரின் தவறான முடிவால் விக்கெட் இழந்த தோனி, இன்னும் சில ஓவர்கள் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தான் வெற்றி என்ற கருத்துக்களும் வந்தன. அந்த ஒரு அரைசதமே இன்னும் நாளு மாதங்களுக்கு தாங்குமே... என்று ரசிகர்கள் இருக்க அடுத்த போட்டியில் மீண்டும் அதிரடி காட்டினார். போதாக்குறைக்கு அந்த போட்டியில் வெற்றிக்கான ரன்னை தோனி தான் எடுத்தார். அதுவும் அவரது டிரேட்மார்க் சிக்சருடன் முடித்தார். வேறு என்ன வேண்டும். அப்போது தோனியின் இருப்பு ஓரளவுக்கு உறுதியாகி விட்டது. முன்னாள் வீரர்கள் அனைவரும் தோனியை அவர் போக்கில் விளையாடவிடுங்கள் என்று பேச தொடங்கிவிட்டனர். 

சரி.. இப்போது கடைசி போட்டி... இந்தியாவுக்கு முக்கியமான போட்டி. தொடரை எந்த அணி வெல்ல போகிறது என்ற பெரும் கேள்வி. மழை குறுக்கிடுகிறது. பேட்டிங்கிற்கு தோதாகாத மைதானம். என்ன செய்ய போகிறார்கள்.

இவை அனைத்துக்கும் பதில், "தோனி". 231 ரன்கள் தான் இலக்கு என்ற போதிலும். இந்திய அணி மிக நிதானமாக தான் விளையாடியது. கடைசி ஓவர் வரை ஆட்டம் நகர்கிறது. தூண் போல தோனி நிற்கிறார். இந்த போட்டியிலும் 50 ரன்கள் கடந்துவிட்டார். இனி இந்தியா வெற்றி பெறாவிட்டாலும் பிரச்னை இல்லை என்ற நிலையில் ஜாதவ்வுடன் இணைந்து வெற்றியையும் பெற்று தந்தார். 

கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு தொடர் நாயகன் விருதுப்பெற்றிருக்கிறார் தோனி. இந்த விருதைப் பெற்ற மூத்த வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். எனவே தோனியின் வயதையும், உடற்தகுதியையும் பற்றி இனி கேள்வியே கேட்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. 

இதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி!

4ம் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற யோசனையில் இருந்த தேர்வுக்குழுவுக்கு தோனியின் முகம் தான் தற்போது கண் முன் இருக்கும். அப்படி தோனியின் ஆட்டம் பற்றி இவ்வளவு பேச வேண்டிய காரணம் என்ன என்று தோன்றலாம். தோனியின் கம்பேக் அவருக்கானது மட்டும் அல்ல. அவர் சிறப்பாக ஆடும் போது தனக்கு நிம்மதியாக இருப்பதாக கேப்டன் கோலி கூறுகிறார். தோனியின் பாசிடீவ் அலைகள் அணியை வலுப்படுத்தும் என்பது யாவரும் அறிந்த ஒன்று. தோனியின் அதிரடி இப்படியே தொடர்ந்தால் உலக கோப்பைக்கு அருகில் இந்திய அணியின் இடம் நிச்சயம் உறுதியாகும். 

கோலி கோப்பையை வாங்கி தோனியிடம் கொடுக்க... அவரை தோளில் தூக்கிக் கொண்டு பண்ட்டும், குல்தீப் யாதவும் மைதானத்தை வலம் வர... தோனி... தோனி என்ற குரல் எங்கும் ஒலிக்க... இதற்கெல்லாம் தோனி நிச்சயம் வேண்டும் தானே?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP