நியூகாஸிலை போராடி வீழ்த்தியது செல்சி!

செல்சி - நியூகாஸில் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி த்ரில் வெற்றி பெற்றது.
 | 

நியூகாஸிலை போராடி வீழ்த்தியது செல்சி!

செல்சி - நியூகாஸில் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி த்ரில் வெற்றி பெற்றது. 

நியூகாஸில் நகரில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், பலம்வாய்ந்த செல்சி அணியுடன் நியூகாஸில் மோதியது. முதல் போட்டியில் டாட்டன்ஹேம் அணியுடன் தோற்ற நியூகாஸில், இரண்டவது போட்டியில் கார்டிஃப் அணியுடன் டிரா செய்தது. இன்னும் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இரண்டு வெற்றிகளுடன் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பலரால் கருதப்படும் செல்சியுடன் மோதியது. 

ஆனால், செல்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் திடமாக விளையாடியது நியூகாஸில். இரு அணி வீரர்களும் தொடர்ந்து அட்டாக் செய்து நெருக்கடி கொடுத்தனர். முதல் 10 நிமிடங்களுக்குள் நியூகாஸில் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், கோல் விழவில்லை. அதன்பின் செல்சியும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்த துவங்கியது. முக்கியமாக ஈடென் ஹசார்டு அசத்தலாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால், முதல் பாதியின் முடிவில் கோல் இல்லாமலே இருந்தது. 

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து இரு அணிகளும் முழு வீச்சில் மோதிக் கொண்டன. 76வது நிமிடம், ஹசார்டு கொடுத்த பாஸை வாங்கி, கோல் அடிக்க ஓடினார் அலோன்சோ. அப்போது அவர் பெனால்டி ஏரியாவில் பவுல் செய்யப்பட, நடுவர் செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். அதில் ஹசார்டு கோல் அடிக்க, செல்சி முன்னிலை பெற்றது. இருந்தாலும், விடாமுயற்சியால், 83வது நிமிடத்தில், நியூகாஸிலின் ஜோஸேலு கோல் அடித்து சமன் செய்தார். போட்டி டிராவாக முடியப் போகும் நிலையில், செல்சியின் அலோன்சோ அடித்த மின்னல் வேக ஷாட், நியூகாஸில் வீரர் எட்லினின் காலில் பட்டு கோலுக்குள் சென்றது. 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி த்ரில் வெற்றி பெற்றது. 

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்திய லிவர்பூல், 3 வெற்றிகளுடன் தற்போது பிரீமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. செல்சி 3 வெற்றிகளுடன் கோல் கணக்கில் பின்தங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP