அகுவேரோ ஹேட்ட்ரிக்; மான்செஸ்டர் சிட்டி ருத்ர தாண்டவம்!

ஹட்டர்ஸ்பீல்டு அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், அகுவேரோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்க, நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் அட்டகாச வெற்றி பெற்றது.
 | 

அகுவேரோ ஹேட்ட்ரிக்; மான்செஸ்டர் சிட்டி ருத்ர தாண்டவம்!

ஹட்டர்ஸ்பீல்டு அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், அகுவேரோ ஹேட்ட்ரிக் கோல்கள் அடிக்க, நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் அட்டகாச வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் ஆர்சனலை 2-0 என வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி, நட்சத்திர வீரர் கெவின் டி ப்ருயினை காயம் காரணமாக இழந்தது. அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர், குணமாகி வர 2 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு பதிலாக டேவிட் சில்வா களமிறக்கப்பட்டார். மேலும்,  கடந்த போட்டியில் விளையாடாத ஜீசஸ் இந்த போட்டியில் விளையாடினார்.

கத்துக்குட்டி அணியான ஹட்டர்ஸ்பீல்டு,  ஆரம்பம் முதல் மான்செஸ்டர் சிட்டியை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது. சிட்டி வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆனால், கோல் விழவில்லை. 25வது நிமிடத்தின் போது, சிட்டி கோல் கீப்பர் எடர்சன் அடித்த பந்து, 9 ஹட்டர்ஸ்பீல்டு வீரர்களை தாண்டி அகுவேரோ கால்களில் வந்து விழ, கோல்கீப்பர் மற்றும் டிபென்ஸ் வீரர்களை தாண்டி அகுவேரோ அசத்தலாக கோல் அடித்தார். 31வது நிமிடத்தில், சிட்டி வீரர்கள் மெண்டி மற்றும் ஜீசஸ் சேர்ந்து கூட்டணி போட்டு பந்தை கடத்தி சென்றனர். ஹட்டர்ஸ்பீல்டு வீரர் காலில் பட்டு சிதறிய பந்தை ஜீசஸ் கோலுக்குள் தள்ளி 2-0 என முன்னிலை கொடுத்தார். 35வது நிமிடத்தில் மீண்டும், சிட்டி வீரர் மெண்டி அடித்த பந்தை, ஹட்டர்ஸ்பீல்டு கோல்கீப்பர் கெட்டியாக பிடிக்காமல் தவற விட, அதை அகுவேரோ கோலுக்குள் தள்ளினார். முதல் பாதி முடியும் நேரத்தில், 41வது நிமிடத்தில் ஒரு ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி, ஹட்டர்ஸ்பீல்டு அணியின் ஸ்டான்கோவிச் கோல் அடிக்க, முதல் பாதி 3-1 என முடிந்தது.

இரண்டாவது பாதியில் சிட்டி மீண்டும் முழு ஆதிக்கம் செலுத்தியது. 48வது நிமிடம் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை டேவிட் சில்வா அற்புதமான ஷாட் மூலம் கோலுக்குள் தள்ளினார். 75வது நிமிடத்தில் அகுவேரோ மீண்டும் கோல் அடிக்க, 82வது நிமிடத்தில் ஹட்டர்ஸ்பீல்டு அணியின் கொங்கோலோ தனது அணிக்கு எதிராகவே ஓன் கோல் அடித்தார். இறுதியில் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரீமியர் லீக் பட்டியலில் முதலிடம் சென்றது. நாளை நடக்கும் போட்டியில், லிவர்பூல் அணி 3 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால் மட்டுமே சிட்டியை இரண்டாவது இடத்திற்கு தள்ள முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP