இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) மூன்று பிராந்திய மையங்களில் இருந்து பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளரை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை, குஜராத், கர்நாடக பிராந்தியங்களின் பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் மீது இளம் வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், இவர்கள் மீது விளையாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்து வந்தது. இதுவே, அந்த பயிற்சியாளர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. இதை வைத்தே மேலும் மேலும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் மீது மட்டும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது...

தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஜூனியர் தடகள வீராங்கனைகள், இந்திய விளையாட்டு ஆணைய தலைமையகத்துக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், தன்னுடைய பாலியல் தேவைக்கு உட்பட வேண்டும் என்றும், நிபந்தனைகளை ஏற்காவிட்டால் தடகள வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று பயிற்சியாளர் மிரட்டுவதாக தெரிவித்திருந்தனர். இதனை அந்த ஜூனியர் வீராங்கனைகள், அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தனர்.

இதே போன்று, குஜராத் மையத்தின் ஜூனியர் முகாமில் இருந்தும் பெங்களூரு மையத்தில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. பெங்களூரு மையத்தில், கணக்காளர், பெண் பயிற்சியாளருக்கு கீழ்த்தரமான செய்திகளை அனுப்பியதாக புகார் வந்தது. 

இது தொடர்பாக விளையாட்டு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணை நடக்கும் காலத்திலேயே, தமிழ்நாடு பயிற்சியாளர் மீது தொடர்ந்து மேலும் பல புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக, தன் மீது புகார் அளித்தது யார் என்று கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. விளையாட்டு ஆணையம் நடத்திய விசாரணையில், அவர் மீண்டும் மீண்டும் தவறு செய்து வருவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், பெங்களூரு விவகாரத்திலும் புகார் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த கணக்காளரை கட்டாய ஓய்வில் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

குஜராத்தில் இருந்து வந்த புகார் தொடர்பாக விசாரணை முடியவில்லை. விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் உடனடியாக அவரும் நீக்கப்படுவார் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் 14,000-க்கும் மேற்பட்ட  (7000 ஆண்கள், 7000 பெண்கள்) இளநிலை வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் இளம் வயதினர் ஆவர். அதிலும் பெரும்பாலும், நடுத்தர, ஏழை மாணவர்கள்தான் தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அவர்களுக்கு மூத்த பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு அளிப்பதும், அது தொடர்பாக வீராங்கனைகள் அளித்த புகார் மனுவில் உள்ள விஷயத்தை ஆராய்ச்சி செய்வதைவிட்டுவிட்டு, அதில் உள்ள பிழைகளை இந்திய விளையாட்டு ஆணையம் ஆய்வு செய்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP