1. Home
  2. விளையாட்டு

ரொனால்டோவின் கடைசி நிமிட கோல்; தப்பியது ரியல் மாட்ரிட்!

ரொனால்டோவின் கடைசி நிமிட கோல்; தப்பியது ரியல் மாட்ரிட்!


நேற்று நடைபெற்ற ஐரோப்பிய க்ளப் கால்பந்து கோப்பை காலிறுதி போட்டியில், ரொனால்டோ அடித்த கடைசி நிமிட கோலால், ரியல் மாட்ரிட் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி சுற்று காலிறுதி போட்டிகளில், ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸ் மற்றும் பாயர்ன் முனிச் - செவில்லா அணிகள் மோதின.

மாட்ரிட்டில் நடந்த போட்டியில், ஜுவென்டஸ் அணிக்கு 3 கோல்கள் தேவைப்பட்டது. காலிறுதியின் முதல் போட்டியில், மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்ததால், இந்த போட்டியில் ஜுவென்டஸ் கட்டாயம் 3 கோல்களாவது அடிக்க வேண்டிய நிலை. நட்சத்திர வீரர் டிபாலா கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் இதில் விளையாட முடியவில்லை.

இந்நிலையில், போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் ஜுவென்டஸின் மாரியோ மாண்ட்சுகிச் கோல் அடித்தார். மீண்டும் அவர் 37வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியின் முடிவில் மாட்ரிட் அணிக்கு கடும் நெருக்கடி எழுந்தது. இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில், மாட்விடி கோல் அடித்து, 3-0 என முன்னிலை பெற உதவினார். முந்தைய நாள் நடந்த காலிறுதியில் பார்சிலோனாவை இதேபோல ரோமா வீழ்த்தியதால், மாட்ரிட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

போட்டி கூடுதல் நேரத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாட்ரிட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி கொடுத்த நடுவரை கடுமையாக சாடிய ஜுவென்டஸ் அணியின் கோல்கீப்பர் பஃபோன், ரெட் கார்டு பெற்று வெளியேறினார். 96வது நிமிடத்தில் ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இரண்டு போட்டிகளையும் சேர்த்து மாட்ரிட் 4-3 என முன்னிலை பெற்றதால் அரையிறுதிக்கு முன்னேறியது.

செவில்லாவுடன் பாயர்ன் முனிச் மோதிய மற்றொரு போட்டி கோல் எதுவும் இல்லாமல் டிரா ஆனது. பாயர்ன் அணி, முதல் போட்டியில் செவில்லாவை 2-1 என வீழ்த்தியதால், அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதி சுற்றில், ரோமா, லிவர்பூல், ரியல் மாட்ரிட் மற்றும் பாயர்ன் முனிச் அணிகள் மோதுவர்கள். எந்த அணி யாருடன் மோத வேண்டும் என்பது நாளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like