1. Home
  2. விளையாட்டு

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்!

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்!

தொடர் தோல்விகளால் மோசமான நிலையில், உள்ள ஐரோப்பிய சாம்பியன் ரியல் மாட்ரிட், புதிய பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்குயி-வை வெறும் 14 போட்டிகளுக்கு பிறகு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல ரியல் மாட்ரிட் அணி, சமீபத்தில் பல்வேறு மாற்றங்களை கண்டது. உலகிலேயே மிக பிரபலமான க்ளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை, தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது ரியல் மாட்ரிட். அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஜிடேன், அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ, 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பிறகு, இத்தாலியின் ஜுவென்டஸ் அணிக்கு சென்றார்.

அதன்பின், ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்குயி, ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக, தங்களது பயிற்சியாளருடன் ரியல் மாட்ரிட் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் கால்பந்து ஆணையம், லோபெட்குயிவை அதிரடியாக பணி நீக்கம் செய்தது.

லோபெட்குயிவின் கீழ், 2018-19 கால்பந்து சீசனில் ரியல் மாட்ரிட் 3 வெற்றிகளுடன் நல்ல துவக்கம் பெற்றாலும், அதன்பின் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. சிறிய அணிகளுடனும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தற்போது வரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரியல் மாட்ரிட், 7 வெற்றி, 2 டிரா, 6 தோல்வி என திண்டாடி வருகிறது. ஸ்பெயின் லீக் தொடரில், 9வது இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட், இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தில் இருக்கும் பரம எதிரிகளான பார்சிலோனாவிடம் 5-1 என படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்குயிவை பணி நீக்கம் செய்வதாக ரியல் மாட்ரிட் தலைவர் ப்ளோரென்டினோ பெரெஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் செல்சி பயிற்சியாளர் அன்டோனியோ கான்டே, ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்காலிக பயிற்சியாளராக சான்டி சொலாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like