இங்கிலாந்தின் கனவை தகர்த்தது குரேஷியா!

உலகக் கோப்பை அரையிறுதியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை நாக் அவுட் செய்து, தங்கள் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரேஷியா.
 | 

இங்கிலாந்தின் கனவை தகர்த்தது குரேஷியா!

உலகக் கோப்பை அரையிறுதியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை நாக் அவுட் செய்து, தங்கள் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரேஷியா.

முதல் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில், பெல்ஜியம் அணியை பிரான்ஸ் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிறு அன்று, உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பிரான்சுடன் மோதும் அணி யார் என்பதை நிர்ணயிக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - குரேஷியா அணிகள் நேற்று மோதின. குரூப் போட்டிகளில் அர்ஜென்டினாவை  3-0 என துவம்சம் செய்த குரேஷியா, இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. 

நட்சத்திர வீரர்கள், மாட்ரிச், ராக்கிடிச் ஆகியோர் அந்த சிறிய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளனர். அதேநேரம், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டனாக உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரர் ஹாரி கேன் உள்ளார். இதுவரை 6 கோல்கள் அடித்துள்ள அவர், இந்த போட்டியில், தனது அசத்தலான பார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கால்பந்து விளையாட்டின் தாய்நாடான இங்கிலாந்து இதுவரை ஒரு உலகக் கோப்பை மட்டுமே வென்றுள்ளது. இந்த முறை அரையிறுதி வரை சிறிய அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைத்ததால், கோப்பை நிச்சயம் வீடு திரும்பும், என இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

போட்டி துவங்கிய 5வது நிமிடமே, இங்கிலாந்துக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் ட்ரிப்பியர் அட்டகாசமான கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து இங்கிலாந்து பல சிறப்பான கோல் வாய்ப்புகளை உருவாக்கி நெருக்கடி கொடுத்தது. குரேஷிய வீரர்கள் விடா முயற்சி செய்து மறுமுனையில் கோல் அடிக்க பார்த்தனர். ஆனால், முதல் பாதி 1-0 என இங்கிலாந்துக்கு சாதகமாக முடிந்தது. 

ஏற்கனவே கோல் அடித்து விட்டதால், இரண்டாவது பாதியில், இங்கிலாந்து டிபென்ட் செய்தே விளையாடியது. பெரிதாக கோல் அடிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால், குரேஷியா தொடர்ந்து அட்டாக் செய்து, பல இடங்களில் கோல் வாய்ப்பை நூலிழையில் விட்டது. தொடர் முயற்சிக்கு பலனாக 68வது நிமிடம், நீண்ட தூரத்தில் இருந்து வந்த பாஸை, குரேஷியாவின் இவான் பெரிசிச் கோல் அடித்தார். போட்டி 1-1 என சமனான பின்னர், இரு அணிகளும் வெற்றிக்கான கோலை பெற அட்டாக் செய்து விளையாடின. 90 நிமிடங்கள் முடிவில் 1-1 என சமனாகவே இருந்தது. 

கூடுதல் நேரத்தில், குரேஷிய வீரர்கள் இங்கிலாந்து கோலுக்கு அருகே பந்தை பாஸ் செய்ய முயற்சித்த போது, அந்த அணியின் மாண்ட்சுகிச்சிடம் பந்து விழுந்தது. கோல் கீப்பர் மட்டும் எதிரே இருந்த நிலையில், பந்தை சுலபமாக கோலுக்குள் தள்ளி, குரேஷியாவுக்கு முன்னிலை கொடுத்தார். கடைசி நிமிடங்களில் இங்கிலாந்தால் கோல் அடிக்க முடியவில்லை. 2-1 என வெற்றி பெற்று தங்களது வரலாற்றிலே முதல்முறையாக உலகக் கோப்பையை இறுதி போட்டிக்கு குரேஷியா முன்னேறியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP