1. Home
  2. விளையாட்டு

குரேஷியாவால் முடிகிறது... இந்தியாவால் ஏன் முடியவில்லை? - ஓர் அதிர்ச்சி அலசல்

குரேஷியாவால் முடிகிறது... இந்தியாவால் ஏன் முடியவில்லை? - ஓர் அதிர்ச்சி அலசல்

கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன. இதில் குரேஷியாவும் பிரான்ஸும் மோதுகின்றன. லீக் மேட்சுகளில் சரியாக விளையாடாத குரேஷியா ஃபைனலுக்கு வந்திருப்பது பலரையும் ஆச்சர்யப் பட வைத்திருக்கிறது. வெறும் 46 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் நாடு இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆனால், 120 கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு இல்லை என்பதே உண்மை. கிரிக்கெட் போட்டியில் விளையாடும் புதுமுக வீரரின் பெயர் தெரிந்தளவு கூட, கால்பந்து, ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுப் போட்டியின் கேப்டன் பெயர்கள் நம்மில் பலருக்கும் தெரியாது.

உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? நிபுணர்கள் அலசல்...

இது பற்றி, சென்னையின் முக்கிய கால்பந்து பயிற்சி நிலையமான, ஹாரிங்டன் அகாடமியின் தலைமை பயிற்றுனர் மூர்த்தி, 'ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை குறைவு. ஆனால் எங்கு பார்த்தாலும் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அதுவும் பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் பறந்து விரிந்து இருக்கின்றன. விளையாட்டுகளுக்கு முக்கியமான மைதானம் இந்தியாவில் போதுமான அளவு இல்லை.

பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளிலும் கூட மைதானங்கள் இல்லாத அவல நிலை இந்தியாவில் தான் இருக்கின்றன. அப்படியே இருந்தாலும் எத்தனை ஆசிரியர்கள் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறார்கள் என்பதே கேள்வி தான். அந்த நேரத்தில் வேறு பாடங்களை எடுக்கவே ஆசிரியர்கள் முனைகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் பார்க்குகள் ஏராளம் உள்ளன. 40 வயதுக்கு மேலானவர்களுக்கு பார்க் அவசியம். ஆனால் 15, 25 வயது இளைஞர்களுக்கு தேவை மைதானங்கள் தான்.

மற்ற எல்லா துறைகளையும் போல, தமிழக அமைச்சர்களில் விளையாட்டுத் துறையிலும் மூன்று பேர் மாறிவிட்டார்கள். தற்போதைய அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் பெயர் எத்தனைப் பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை. விளையாட்டுத் துறை சார்பாக 5 கோடி ஒதுக்கிறார்கள் என்றால் அது நமக்கு பெரிய தொகையாக தெரியும். அதை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மைதானங்களுக்கு ஒதுக்கினால், வெள்ளை அடிக்கக் கூட பத்தாது.

அரசாங்கமும் தகுந்த விளையாட்டுகளின் அசோஷியேசனும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். முன்பிருந்த ஸ்போர்ட்ஸ் கோட்டாவும் இப்போது இல்லை. அதனால் விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் அப்படியே குறைகிறது. அதோடு பெற்றோர்களும் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி, அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களுக்கு உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதனால் எந்த ஒரு தவறான பழக்கத்திற்கும் அவர்கள் ஆளாக மாட்டர்கள். இப்போதும் ஆர்வமாக நிறைய பேர் மற்ற விளையாட்டுகளைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் 10, 15 வருடம் கழித்து அவர்களுக்கான முன்னுரிமைகளும், வாய்ப்புகளும் வழங்க பட்டால் மட்டுமே ஓரளவாது கிரிக்கெட்டைப் போல் மற்ற விளையாட்டுகளும் லைம் லைட்டிற்கு வரும்' என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like