1. Home
  2. விளையாட்டு

பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்தது மான்செஸ்டர் சிட்டி!

பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்தது மான்செஸ்டர் சிட்டி!


உலகிலேயே மிகப்பெரிய க்ளப் கால்பந்து தொடரான இங்கிலாந்து பிரீமியர் லீகை, மான்செஸ்டர் சிட்டி அணி வென்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தை சேர்ந்த இரண்டாவது பெரிய க்ளப் அணியான சிட்டி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 38 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை 33 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், 28 வெற்றிகளுடன் 87 புள்ளிகள் பெற்று கோப்பையை சிட்டி கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் சிட்டிக்கும் ஆகவே ஆகாது. பலமுறை பிரீமியர் லீக் கோப்பையை யுனைட்டட் வென்றுள்ள நிலையில், சிட்டி 2012ம் ஆண்டு தான் முதல்முறையாக அதை வென்றது. அதன்பிறகு, 2014ம் ஆண்டும் கோப்பையை வென்ற சிட்டி, 3வது முறையாக இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில், இரண்டாவது இடத்தில் உள்ள யுனைட்டட்டுடன் சிட்டி மோதியது. அதில் வெற்றி பெற்றால், தங்களது பரம எதிரியான யுனைட்டட் முன்னிலையில், லீக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருந்தது. போட்டியின் முதல் பாதியில் சிட்டி 2 கோல்கள் அடிக்க, வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது பாதியில் 3 கோல்கள் அடித்த யுனைட்டட், 3-2 என சிட்டியை வீழ்த்தியது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில், சிட்டி 3-1 என டாட்டன்ஹேமை வீழ்த்தியது. அதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள யுனைட்டட், 20வது இடத்தில் உள்ள வெஸ்ட் ப்ராமுடன் மோதியது. அதில் யுனைட்டட் தோற்றதால், இன்னும் 5 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 16 புள்ளிகள் முன்னிலை பெற்ற சிட்டி, கோப்பையை கைப்பற்றியது.

சிட்டி அணிக்கு இரண்டு ஆண்டுக்கு முன் வந்த பிரபல பயிற்சியாளர் பெப் கார்டியோலா, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் இதுவரை அதிகபட்சமாக ஒரு அணி 95 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சிட்டி நிச்சயம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதன்முறையாக 100 புள்ளிகளை தொடும் வாய்ப்பும் உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like