1. Home
  2. விளையாட்டு

செல்சியை வீழ்த்தி கரபாவ் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி!

செல்சியை வீழ்த்தி கரபாவ் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி!

இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து தொடரான கரபாவ் கோப்பையின் இறுதிப்போட்டியில், செல்சியை பெனால்டி ஷூட்டில் 4-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி.

இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகள் விளையாடும் கரபாவ் கோப்பை இறுதிப் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி செல்சி அணிகள் மோதின. லண்டன் வெம்பிலி மைதானத்தில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி நடைபெற்றது.

இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே மான்செஸ்டர் சிட்டி அணி, ஆதிக்கம் செலுத்தி பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியது. சிட்டி வீரர்கள் தொடர்ந்து செல்சிக்கு நெருக்கடி கொடுத்து வாய்ப்புகளை உருவாக்கி வந்தனர். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதியில், செல்சி அணி மீண்டு வந்து, சிறப்பாக விளையாடியது. செல்சி அணியின் ஹசார்டு மிக சிறப்பாக விளையாடி, கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். 90 நிமிடங்கள் முடியும் போது, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கடைசிவரை கோல் கிடைக்கவில்லை. கூடுதல் நேரம் முடியும்போது, 0-0 என்று இருந்ததால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கூடுதல் நேரம் முடியும்போது, பெனால்டி ஷூட்டுக்காக, செல்சி அணியின் கோல் கீப்பர் கெப்பாவை மாற்ற, பயிற்சியாளர் மாரிசியோ சாரி முடிவெடுத்தார். மாற்று கோல்கீப்பர் உள்ளே நுழைய தயாராக இருந்தும், தன்னால் வெளியே வர முடியாது, என மறுத்து மைதானத்திற்குள்ளேயே நின்றார் கெப்பா. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பயிற்சியாளரின் பேச்சை கேட்காமல், சக வீரர்களின் வற்புறுத்தலையும் மதிக்காமல், உள்ளேயே அவர் நின்றது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட்டில், அகுவேரோ அடித்த பந்தை எளிதாக பிடிக்க வேண்டிய நிலையில், கெப்பா தவறவிட்டார். ஏற்கனவே பயிற்சியாளருக்கும் அணி வீரர்களுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like