எகிப்தின் கதை இன்று முடியுமா? ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைக்கு இதுவரை இல்லாத அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
 | 

எகிப்தின் கதை இன்று முடியுமா? ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைக்கு இதுவரை இல்லாத அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. குரூப் போட்டிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய அணிகள் சோபிக்காமல் சிறிய அணிகள் அசத்தலாக விளையாடி நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளன. இன்றோடு முதல் சுற்று குரூப் போட்டிகள் முடிவடைந்து இரண்டாவது சுற்று துவங்குகிறது. இன்று நடைபெறவுள்ள 3 போட்டிகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை பார்க்கலாம்... 

கொலம்பியா vs ஜப்பான்

எகிப்தின் கதை இன்று முடியுமா? ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்!

தென் அமெரிக்காவின் இளம் சிறுத்தைகளை கொண்ட கொலம்பியா, ஜப்பானுடன் மோதுகிறது. கடந்த உலகக் கோப்பையில், காலிறுதி போட்டிகள் வரை சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது கொலம்பியா. அதுவும், அசத்தல் கோல்கள், மைதானத்திலேயே டான்ஸ், என ரசிகர்களுக்கு செம தீனி போட்டனர் கொலம்பியா வீரர்கள். 5 போட்டிகளில் அந்த அணியின் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் 6 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை பெற்றார். காயம் காரணமாக இந்த முதல் போட்டியில் ராட்ரிகெஸ் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவர் இல்லாவிட்டாலும் நட்சத்திரங்களுக்கு குறைவில்லை. ஃபல்காவோ, பாக்கா, க்வட்ராடோ, கார்லோஸ் சான்ச்ஸ் போன்ற வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. 

ஜப்பான் அணியும், இந்தமுறை கொலம்பியாவுக்கு பலப்பரீட்சை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷின்ஜி ககவா, ஓகசாகி, கெய்சுக்கே ஹோண்டா ஆகிய வீரர்கள் மீது ஜப்பான் ரசிகர்களின் பார்வை இருக்கும். சிறப்பான அட்டாக்கிங் திறமை கொண்டுள்ள ஜப்பானை கொலம்பியா குறைத்து எடை போடாது என அந்த அணியின் பயிற்சியாளர் பெக்கர்மேன் தெரிவித்துள்ளார்.

போலந்து vs செனகல் 

எகிப்தின் கதை இன்று முடியுமா? ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்!

2002ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரான்ஸ், உருகுவே, டென்மார்க் ஆகிய பெரிய அணிகளுடனான குரூப்பில், கத்துக்குட்டி அணியாக நுழைந்த செனகல், நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தது. அந்த தொடரில் காலிறுதி போட்டிகள் வரை சென்ற செனகல் அணி, உலகக் கோப்பையின் மிகவும் போற்றப்பட்ட அணிகளுள் ஒன்றாகும். தற்போதைய செனகல் அணியில், சாடியோ மானே, குயாட்டே, குயிபாலி, டியோப், போன்ற டாப் வீரர்கள் உள்ளனர்.

உலகின் மிகசிறந்த அட்டாக்கிங் வீரர்களுள் ஒருவரான லேவன்டாஸ்கியை பெரிதும் நம்பியுள்ளது போலந்து. மேலும், க்ராச்சோவியாக், பிளாஸ்சிச்சாவ்ஸ்கி, மிலிக் ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள். சிறப்பான அட்டாக்கிங் திறமையை கொண்டுள்ள இரு அணிகளும் விளையாடும் இந்த போட்டி, நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். 

ரஷ்யா vs எகிப்து

எகிப்தின் கதை இன்று முடியுமா? ஃபிபா உலகக் கோப்பை முன்னோட்டம்!

போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா, எகிப்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவை 5-0 என பந்தாடிய ரஷ்யா, உருகுவேயிடம் 1-0 என வீழ்ந்த எகிப்து அணியுடன் மோதுகிறது. சவுதி அரேபியாவின் சொதப்பல் ஆட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஏறத்தாழ நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட சந்தோஷத்தில் உள்ளது ரஷ்யா. பலம்வாய்ந்த உருகுவேயையும், ரஷ்யாவையும் மீறி நாக் அவு சுற்றுக்கு எகிப்து முன்னேற வேண்டுமென்றால், இந்த போட்டியில் பல கோல்கள் அடிக்க வேண்டும். இல்லையென்றால், குரூப் முடிவில் ஒரே அளவு புள்ளிகள் இருக்கும்பட்சத்தில், கோல்கள் முன்னிலையில் ரஷ்யா தகுதி பெறக்கூடும். 

எனவே இந்த போட்டி, எகிப்துக்கு வாழ்வா சாவா போட்டி போல. ரஷ்யாவை வீழ்த்தவும் வேண்டும், அதேநேரம், பல கோல்களும் அடிக்க வேண்டும். எகிப்தின் நட்சத்திர வீரர் முஹம்மது சாலா, கடந்த மாதம் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி வருவதால், முதல் போட்டியில் விளையாடவில்லை. ஆனால், இந்த போட்டியில் சாலா நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விளையாடும் பட்சத்தில் எகிப்து அணியின் வெற்றி வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும். இந்த போட்டியில் ரஷ்யா எகிப்தை முழுக்க முழுக்க தடுத்து ஆட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய ரசிகர்கள் முன்னிலையில், எகிப்தால் வெற்றி பெற முடியுமா? சாலா தனது மேஜிக்கை உலகக் கோப்பை அரங்கிற்கு கொண்டு வருவாரா? பார்க்கலாம்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP