உருகுவேயை காலி செய்தது பிரான்ஸ்!

உலகக் கோப்பையின் முதல் காலிறுதி போட்டியில், உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 | 

உருகுவேயை காலி செய்தது பிரான்ஸ்!

உலகக் கோப்பையில் இன்று உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய முதல் காலிறுதி போட்டியில், பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் மிக சிறப்பாக விளையாடி வரும் இரு அணிகளான உருகுவே மற்றும் பிரான்ஸ், முதல் காலிறுதி போட்டியில் மோதின. காலிறுதி சுற்றிலேயே மிகப்பெரிய போட்டியாக இது பார்க்கப்பட்டது. போட்டியில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் கவானி விளையாடவில்லை. பிரான்ஸ் முழு பலத்துடன் இறங்கியது. 

பிரான்ஸ் தனது அட்டாக்கிங் விளையாட்டை முதலில் இருந்தே சிறப்பாக செய்தது. ம்பாப்பே, கிரீஸ்மேன், ஜிரு ஆகியோர் தொடர்ந்து உருகுவேக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். உருகுவே அணி சிறப்பாக டிபெண்ட் செய்து, பிரான்ஸ் உருவாக்கிய கோல் வாய்ப்புகளை தடுத்தது. உருகுவேயின் சுவாரஸ் கடும் முயற்சி எடுத்தும், அவருக்கு சிறப்பான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த நிலையில், முதல் பாதியில் 40வது நிமிடத்தின் போது, பிரான்ஸ் அணிக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கிரீஸ்மேன் லாவகமாக பாஸ் செய்ய, வரான் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

இரண்டாவது பாதியில் உருகுவே தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், தொடர்ந்து அந்த அணிக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. 61வது நிமிடத்தில் கிரீஸ்மேன் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தூரத்தில் இருந்து பவர் ஷாட் ஒன்று அடித்தார். தனது கைக்கு நேராக வந்த அந்த ஷாட்டை உருகுவே கோல் கீப்பர் முசலேரா தவறவிட, அது கோலுக்குள் சென்றது. பின் உருகுவே கடும் முயற்சி எடுத்தும் எந்த பலனும் இல்லை. போட்டி 2-0 என முடிந்தது. 

இன்று நடைபெறும் மற்றொரு காலிறுதி போட்டியில், பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெரும் அணி, பிரான்ஸுடன் அரையிறுதி போட்டியில் மோதும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP