1. Home
  2. விளையாட்டு

ஐரோப்பிய சூப்பர் கோப்பை: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி வென்றது அட்லெடிகோ!

ஐரோப்பிய சூப்பர் கோப்பை: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி வென்றது அட்லெடிகோ!

ஐரோப்பிய சாம்பியன்களுக்கு இடையேயான சூப்பர் கோப்பை போட்டியில், பலம்வாய்ந்த ரியல் மாட்ரிட்டை அட்லெடிகோ மாட்ரிட் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஐரோப்பிய கண்டத்தின் பிரதான் க்ளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல்நிலை போட்டியான சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கும், இரண்டாவது நிலை போட்டியான யூரோப்பா கோப்பையை வெல்லும் அணிக்கும் இடையே ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் கோப்பை போட்டி நடைபெறும். கடந்த சீசனில், சாம்பியன்ஸ் கோப்பையை ரியல் மாட்ரிட் அணியும், யூரோப்பா கோப்பையும் அட்லெடிகோ மாட்ரிட் அணியும் வென்றன. ஒரே நகரத்தை சேர்ந்த இரண்டு அணிகள், இதுபோல சாம்பியன்ஸ் கோப்பையையும் யுரோப்பா கோப்பையையும் வெல்வது இதுவே முதல்முறை.

இரு அணிகளும் முழு பலத்துடன் இறங்கின. ரியல் மாட்ரிட் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவென்டஸ் அணிக்கு சென்ற நிலையில், அவருக்கு பதிலாக மார்கோ அசென்சியோ அணியில் சேர்க்கப்பட்டார். புதிய பயிற்சியாளர் ஜுலேன் லோபெடெகியின் முதல் போட்டி இது என்பதால், பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. போட்டி துவங்கிய முதல் நிமிடமே, அட்லெடிகோ மாட்ரிடின் டியேகோ கோஸ்டா, மாட்ரிட் டிபென்ஸை தனி ஆளாக தாண்டி சென்று, குறுகிய இடைவெளை வழியாக சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

இரு அணிகளும் முழு வீச்சில் அட்டாக் செய்து விளையாடின. 27வது நிமிடத்தின் போது, ரியல் மாட்ரிடின் காரெத் பேல் கொடுத்த பாஸில், பென்சிமா கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் செய்யப்பட்டது. முதல் பாதி 1-1 என முடிந்தது.

63வது நிமிடத்தின் போது, அட்லெடிகோ அணியின் கேப்டன் டியேகோ கோடின், பந்தை கையால் தடுத்தார். இதனால், ரியல் மாட்ரிடுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் அந்த அணியின் ராமோஸ் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். வெற்றியை நோக்கி ரியல் மாட்ரிட் சென்று கொண்டிருந்த நேரம், 79வது நிமிடத்தில், டியேகோ கோஸ்டா மீண்டும் கோல் அடித்து சமன் செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது.

கூடுதல் நேரத்தின் முதல் பாதியிலேயே, 98வது நிமிடத்தில் அட்லெடிகோவின் சவுல் நிகெஸ் அசத்தலான வாலி கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். 104வது நிமிடத்தில், அட்லெடிகோவின் கோக்கே கோல் அடிக்க, 4-2 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

newstm.in

Trending News

Latest News

You May Like