1. Home
  2. விளையாட்டு

மெஸ்ஸிக்காக ரூ.11,000 கோடி கொடுக்க சீன க்ளப் ரெடி!



பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியை வாங்க சீனாவில் உள்ள ஒரு க்ளப் அணி, ரூ.11,000 கோடி வரை செலவழிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் சிறந்த வீரராக 5 முறை தேர்வாகியுள்ள பார்சிலோனா அணியின் மெஸ்ஸி, அடுத்த ஆண்டும் சிறந்த வீரர் விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை 35 போட்டிகளில் விளையாடி 27 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி.

30 வயதாகும் அவர், கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரர் என பலரால் கருதப்படுகிறார். கடந்த சில வருடங்களாக சீனாவில் புதிய க்ளப் போட்டிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. உலகின் தலை சிறந்த வீரர்களை பெரும் தொகை கொடுத்து வாங்கி வருகின்றன சீன க்ளப்கள். சமீபத்தில் பார்சிலோனா அணியில் விளையாடிய மாஸ்கரானோ, சீனாவில் உள்ள ஹெபெய் அணியால் வாங்கப்பட்டார். அதேபோல, லாவெசி என்ற மற்றொரு அர்ஜென்டினா வீரரும் ஹெபெய் அணிக்கு சென்றுள்ளார்.

தற்போது மெஸ்ஸியையும் வாங்க ஹெபெய் அணி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் பார்சிலோனா அணியுடன் 2021ம் ஆண்டு வரை இருக்க மெஸ்ஸி ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் படி, மெஸ்ஸியை வேறு அணி வாங்க, சுமார் 5500 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். சீனாவில் சமீபத்தில் மாற்றப்பட்டுள்ள வரி சட்டத்தின் படி, வெளிநாட்டில் இருந்து வாங்கும் வீரர்களுக்கு கால்பந்து அணிகள் செலவழிக்கும் தொகையில் 100% வரியாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மெஸ்ஸியை வாங்க ஹெபெய், சுமார் 11,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வளவு பெரிய தொகையை எப்படி கொடுப்பது என்பது குறித்து ஹெபெய் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால், 14வது வயதில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, வேறு க்ளப் செல்ல வாய்ப்பே இல்லை என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like