1. Home
  2. விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி


நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ரியல் மாட்ரிட் - பாரிஸ் அணிகள் மோதின.

இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் முதல் போட்டியில், ரியல் மாட்ரிட் 3-1 என வென்றிருந்தது. பாரிஸ் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக அந்த போட்டியின் நடுவில் வெளியேறினார். இந்த போட்டியிலும் அவரால் பங்குபெற முடியவில்லை. அவருக்கு பதில் டி மரியா, அணியில் சேர்க்கப்பட்டார்.

2 கோல்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் பாரிஸ் அணி விளையாடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 51வது நிமிடத்தில், மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். அந்த கோலோடு, தொடர்ந்து 9 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோல் அடித்த சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

அதன்பின், பாரிஸ் அணியின் வெர்ராட்டி, மாட்ரிடுக்கு எதிராக பவுல் வழங்காத கோபத்தில் ரெஃப்ரியிடம் சென்று கத்தினார். ஏற்கனவே அவர் மஞ்சள் கார்டு பெற்றிருந்த நிலையில், ரெஃப்ரி மற்றொரு மஞ்சள் கார்டு கொடுத்து ஆட்டத்தை விட்டு நீக்கினார்.

71வது நிமிடத்தில், பாரிஸ் அணியின் கவானி கோல் அடித்து சமன் செய்தார். மேலும் இரண்டு கோல்கள் அடிக்க வேண்டிய நிலையில், 10 வீரர்களை மட்டுமே கொண்டிருந்த பாரிஸ் தடுமாறியது. 80வது நிமிடத்தில் மாட்ரிட் அணியின் காசிமேரோ கோல் அடித்து, 2-1 என மாட்ரிட் வெல்ல உதவினார். இதைத் தொடர்ந்து, முதல் அணியாக ரியல் மாட்ரிட் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில், இங்கிலாந்தின் லிவர்பூல் அணி, போர்ட்டோவுடன் கோல் எதுவும் அடிக்காமல் டிரா செய்தது. முதல் போட்டியில் லிவர்பூல் 5-0 என வென்றிருந்ததால், காலிறுதி சுற்றுக்கு லிவர்பூல் எளிதாக தகுதி பெற்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like