1. Home
  2. விளையாட்டு

ஆர்சனலை நாக் அவுட் செய்தது அட்லெட்டிகோ மாட்ரிட்!

ஆர்சனலை நாக் அவுட் செய்தது அட்லெட்டிகோ மாட்ரிட்!


யூரோப்பா லீக் கால்பந்து கோப்பையின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்தின் ஆர்சனலை வீழ்த்தி நாக் அவுட் செய்தது அட்லெட்டிக்கோ மாட்ரிட்.

ஐரோப்பிய கால்பந்தில் இரண்டாம் தர கோப்பையான யூரோப்பா லீகின் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று மாட்ரிட்டில் நடைபெற்றது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை மையமாக கொண்ட ஆர்சனல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்த அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியுடன் மோதியது. இரண்டு போட்டிகளாக நடைபெறும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டி, லண்டனில் நடந்தது. அந்த போட்டி 1-1 என டிரா ஆகியிருந்த நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

22 வருடங்களாக ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆர்சீன் வெங்கர், இந்த ஆண்டோடு அந்த அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். அவரின் கீழ் ஆர்சனல், ஐரோப்பிய கால்பந்தில் மிகப்பெரிய சவாலாக கருதப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை. இந்த ஆண்டு, சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறாமல், இரண்டாம் தர தொடரான யூரோப்பா கோப்பைக்கு தகுதி பெற்றது ஆர்சனல். சரி இந்த கோப்பையையாவது வென்று, வெங்கரின் கடைசி சீசனை வெற்றிகரமாக ஆர்சனல் முடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு மிஞ்சியதோ ஏமாற்றம் தான்.

பலம்வாய்ந்த அட்லெட்டிக்கோ மாட்ரிட், ஆரம்பம் முதல் நிதானமாக டிஃபெண்ட் செய்து ஆடியது. முதல் போட்டி 1-1 என டிரா ஆனதால், ஒரு கோலாவது அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்சனல் விளையாடியது. ஆனால், முதல் பாதி முடியும் நேரத்தில், அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியின் டியேகோ கோஸ்டா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முன்னதாக போட்டி துவங்கி 12வது நிமிடத்திலேயே, ஆர்சனலின் முக்கிய வீரர் லாரண்ட் கோசியெல்னி காயம் காரணமாக வெளியேறினார்.

இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கினாலும் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது. அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 2-1 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிக்கோ மாட்ரிட் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

வரும் 16ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில், அட்லெட்டிக்கோ மாட்ரிட், பிரான்ஸை சேர்ந்த மார்சேய் அணியுடன் மோதுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like