1. Home
  2. விளையாட்டு

ஆர்சனல் பயிற்சியாளர் வெங்கர் ராஜினாமா!

ஆர்சனல் பயிற்சியாளர் வெங்கர் ராஜினாமா!


இங்கிலாந்து பிரீமியர் லீக்கின் முக்கிய அணிகளுள் ஒன்றான ஆர்சனலின் பயிற்சியாளர் ஆர்சீன் வெங்கர், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த ஆர்சனல் க்ளப் அணி, கால்பந்து உலகில் மிகவும் பிரபலமாகும். 1996ம் ஆண்டு அந்த அணியில் பயிற்சியாளராக சேர்ந்தார், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆர்சீன் வெங்கர். 22 வருடங்களாக ஆர்சீன் மேற்பார்வையில், அந்த அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.

முக்கியமாக, இங்கிலாந்து பிரீமியர் லீக் கோப்பையை 3 முறையும், எஃப்.ஏ கோப்பையை 7 முறையும் வெங்கர் தலைமையில் ஆர்சனல் வென்றுள்ளது. 2003-04ம் ஆண்டு பிரீமியர் லீக் கோப்பையை ஆர்சனல் வென்ற போது, 38 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் எந்த போட்டியிலும் தோற்காமல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த அணியும் இதுபோன்ற ஒரு சாதனையை படைத்தது இல்லை. அதனால் அந்த அணிக்கு தங்க பிரீமியர் லீக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும், 'இன்வின்சிபில்ஸ்' (வீழ்த்த முடியாதவர்கள்) என்ற படமும் வழங்கப்பட்டது.

2005ம் ஆண்டு எஃப்.ஏ கோப்பையை வென்ற பின், தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு ஆர்சனல் எந்த கோப்பையையும் வெல்லவில்லை. இதனால், ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். 2014, 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எஃப்.ஏ கோப்பையை அந்த அணி வென்றது. ஆனாலும், ஐரோப்பிய கால்பந்து உலகின் தலைசிறந்த போட்டிகளான சாம்பியன்ஸ் லீக் மற்றும் இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடர்களில், ஆர்சனல் திக்குமுக்காடி வருகிறது. இவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளில் வெங்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால், அவர் விடாப்பிடியாக பதவியில் நீடித்து வந்தார். கடந்த ஆண்டு, அவர் பதவி விலகக் கோரிய சில ரசிகர்கள், ஒரு சிறியரக விமானத்தை வாடகைக்கு எடுத்து, அதில் 'வெங்கர் அவுட்' என எழுதி மைதானத்தில் அனைவரும் பார்க்கும்படி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆண்டும், பிரீமியர் லீக்கில் சொதப்பலாக விளையாடிய ஆர்சனல் தற்போது 6வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் பெற வேண்டுமென்றால் முதல் 4 இடங்களில் வர வேண்டும். அது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், தான் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக வெங்கர் அறிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பதவி விலகும் செய்தி தெரிந்தவுடன், அவரது சாதனைகளை பாராட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அடுத்ததாக யார் அந்த அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்பது தான் கால்பந்து உலகின் தற்போதய ஹாட் டாக்!

newstm.in

Trending News

Latest News

You May Like