1. Home
  2. விளையாட்டு

மீண்டும் சொதப்பிய ஆர்சனல்: அட்லெடிகோவுடன் டிரா!

மீண்டும் சொதப்பிய ஆர்சனல்: அட்லெடிகோவுடன் டிரா!


யுரோப்பா லீக் கால்பந்து கோப்பையின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்தின் ஆர்சனல் அணியுடன், ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மோதியது.

லண்டனில் உள்ள ஆர்சனலின் எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, ஆர்சனல் மேனேஜர் ஆர்சீன் வெங்கர், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்த பின் நடைபெறும் முதல் போட்டியாகும். முதலில் இருந்தே ஆர்சனல் சிறப்பாக விளையாடியது.

அட்லெடிகோவின் வ்ரிசால்ஜ்கோ, 10வது நிமிடத்திலேயே ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். ஏற்கனவே மோசமான ஒரு பவுலுக்காக மஞ்சள் கார்டு பெற்றிருந்த அவர், ஆர்சனலின் லாகசெட்டின் காலை மிதித்துவிட்டார். உடனே ரெஃப்ரீ அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். 10வது நிமிடம் முதல் 10 வீரர்களுடன் விளையாடியது அட்லெடிகோ.

இரண்டாவது பாதியின், 60வது நிமிடத்தில் லாகசெட் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், தொடர்ந்து போராடிய அட்லெடிகோ, 81வது நிமிடத்தில் கோல் பெற்றது. கோல் கீப்பரை தாண்டி சென்ற அட்லெடிகோ வீரர் கிரீஸ்மேன், போட்டியை சமன் செய்தார்.

பல வாய்ப்புகளை உருவாக்கிய ஆர்சனல் வீரர்கள், அதில் கோல் அடிக்காமல் சொதப்பினர். அதன் விளைவாக, 10 பேர் கொண்ட அட்லெடிகோ போட்டியை டிரா செய்து விட்டது. அடுத்த வாரம், இந்த சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. அதில் கோல் இல்லாமல் டிரா செய்தால், அட்லெடிகோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு கோலாவது அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆர்சனல்.

newstm.in

Trending News

Latest News

You May Like