1. Home
  2. விளையாட்டு

இந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி மறக்காது-தொடரை வென்றது இந்தியா..!

இந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி மறக்காது-தொடரை வென்றது இந்தியா..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அபரா வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடைபெற்றது. ஏற்கனவே 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்ததால், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. முதல் இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகளே வெற்றிபெற்றதால் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் தவறான கணக்கு போட்டுவிட்டார்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். ரோகித் ஷர்மா 71 (34) ரன்களில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் கோலி தொடக்க ஆட்டக்காரர் ராகுலுடன் சேர்ந்து அதிரடியை தொடங்கினார். இருவரின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 91 (56) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதிவரை அவுட் ஆகாமல் விளையாடிய கோலி 70 (29) ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 241 என்ற இமாலய இலக்கை எதிர்த்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து பரிதாப நிலையை அடைந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த சிம்ரான் ஹெட்மெயர் மற்றும் கேப்டன் பொலார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினர். 41 (24) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெட்மெயர் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து போராடிய பொலார்ட் 68 (39) ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை கே.எல்.ராகுலும், தொடர் நாயகன் விருதை கேப்டன் விராட் கோலியும் பெற்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like