இந்தியாவின் ராணுவ வலிமை: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி!

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படையில் அக்னி 5 இணைக்கப்பட்டால், சீனாவைத் தாண்டி ஐரோப்பிய நாடுகள் வரையிலும் கூட நம்மால் ஏவுகணையைச் செலுத்த முடியும். இந்திய ஏவுகணையின் வலிமையைக் கண்டு பாகிஸ்தான், சீனா அலற ஆரம்பித்துள்ளன.
 | 

இந்தியாவின் ராணுவ வலிமை: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி!

இந்தியா ஜனநாயக நாடு, அமைதியை விரும்பும் நாடு. அதேநேரத்தில் யாராவது நம் மீது கை வைத்தால் அவர்களை அழிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் பலமிக்க ராணுவத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவிடம் உள்ள ஏவுகணைகளை வைத்து கண்டம் விட்டு கண்டம் பாய முடியும். சீனா, மத்திய கிழக்கைத் தாண்டி ஐரோப்பாவுக்குள் நுழையும் அளவுக்கு ராணுவ வலிமை இந்தியாவுக்கு உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு ஒடிஷாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுகணை செலுத்தும் மையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சரியாகக் காலை 9.53 மணிக்கு 17 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 19 நிமிடங்களில், 4900 கி.மீ பயணித்த அக்னி 5, ஆஸ்திரேலியா அருகில் இந்திய பெருங்கடலில் குறிக்கப்பட்ட இலக்கைத் தாக்கியது.

ஒன்றரை டன் வரையிலா அணு ஆயுதம் உள்ளிட்ட வெடிப்பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் அக்னி 5. இந்த ஏவுகணையை இதுவரை நான்கு முறை பரிசோதனை செய்து பார்த்ததில் ராணுவ அதிகாரிகளுக்கு முழுத் திருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிடம் ஏற்கனவே, அக்னி 1, 2, 3, 4 என ஏவுகணைகள் உள்ளன. இதில், அக்னி 1 ஏவுகணை தரை இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்தை 900 கி.மீ தூரத்துக்கக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆயுத ஆய்வாளர்கள் இது சுமார் 1,250 கி.மீ தூரம் சுமந்து சென்று துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது என்கின்றனர். இதைச் சாலை மற்றும் ரயிலில் இருந்து கூடச் செலுத்த முடியும் என்பதால், நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் செலுத்த முடியும்.

அக்னி 2 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதில், ஒரு டன் வரையிலான வெடி மருந்தைச் சுமந்து செல்ல முடியும். வெறும் 15 நிமிடங்களில் இதைச் செலுத்த தயார் செய்ய முடியும் என்பது இதன் கூடுதல் பலம்.

அக்னி 3 ஏவுகணை 5000 கி.மீ தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதில், இரண்டரை டன் வரையிலான அணு ஆயுதத்தைக் கூடச் செலுத்த முடியும். உலகின் துல்லியமான அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளுள் ஒன்றாக அக்னி 3 கருதப்படுகிறது. இந்த ஏவுகணையை முதன் முறையாக 2007ம் ஆண்டுப் பரிசோதனை செய்து பார்த்தனர்.

அக்னி 4 ஏவுகணை 3500 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலான இலக்கை துல்லியமாகத் தாக்கும். 2011ம் ஆண்டு இது சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்டது. விண்ணில் சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணை 800 கி.மீ உயரம் சென்றது. பின்னர்ப் புவி வளிமண்டலத்துக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இந்தியப் பெருங்கடலில் குறிக்கப்பட்ட இலக்கை வெறும் 20 நிமிடங்களில் துல்லியமாகத் தாக்கியது. இரண்டரை டன் வரையிலான வெடி மருந்தை இது சுமந்து செல்லும்.

அக்னி 5 தற்போது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது 8000 கி.மீ தூரம் வரை செல்லும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது 4900 கி.மீ தூரத்துக்குத்தான் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த ஆய்வு முடிவு திருப்தி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராணுவத்தில் சேர்ப்பதற்கான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி 6 ஆய்வு நிலையில் உள்ளது. இது 8,000 முதல் 10,000 கி.மீ தூரத்தைச் சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்து செலுத்த முடியும்.

இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் தினம் தினம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது சொல்லப்படும் தூரம் என்பது குறைவு. உண்மையில் தாக்கி அழிக்கும் திறன் அதிகமாக இருக்கும் என்கின்றனர் சர்வதேச ஆயுதங்கள் கண்காணிப்பாளர்கள்.

இந்தியா அணுப் பொருட்கள் விநியோகிக்கும் கூட்டமைப்பில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்குச் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது. அதேபோல், ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வருகிறது. இந்த மாதிரியான சூழலில் கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் ஆயுதங்களை இந்தியா பரிசோதனை செய்வது, இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்பதால் ஏவுகணைகளின் திறனை இந்தியா குறைவாகச் சொல்வதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தியாவிடம் தற்போதுள்ள ஆயுதங்களை வைத்து பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் தாக்க முடியும். இதனால், அக்னி 5 பரிசோதனையால்தான் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்று இல்லை. இதனால், பாகிஸ்தான் பயத்துடன் வேடிக்கை பார்த்து வருகிறது. 5000 கி.மீ இலக்கு என்பது சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் என்பதால் நேரடி மிரட்டல் என்று கூறியுள்ளது சீனா.

சீனாவின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், சீனாவுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் மற்றும் அணு ஆயுத பரவலைத் தவிர்க்க உலக நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் "என்று குறிப்பிட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில், அக்னி 5 ஏவுகணை இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து செலுத்தப்பட்டது. 3000 மைல் பயணித்தது இலக்கை அடைந்துள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங், வர்த்தகத் தலைநகர் ஷாங்காய் உள்ளிட்டவை அக்னி 5 தொடும் தூரத்தில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. உண்மையில், சீனாவைத் தாண்டி, ஐரோப்பா வரையிலும் தாக்கும் திறனை இந்தியா பெற்றிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP