Logo

அம்மா ஏன் அத்தனை முக்கியமானவள்?

ஒரு உயிர் உருவாவதற்கு அன்னை தந்தை என இருவரும் முக்கியம். அப்பா - அம்மாவின் பாதி ஜீவன் சேர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது. இருவரும் சமம் என்றாலும் அப்பாவை விட அம்மாவை ஒரு படி நாம் உயர்த்தி வைத்திருக்கிறோம் என்பதே உண்மை.
 | 

அம்மா ஏன் அத்தனை முக்கியமானவள்?

அம்மா ஏன் அத்தனை முக்கியமானவள்?

ஒரு உயிர் உருவாவதற்கு அன்னை தந்தை என இருவரும் முக்கியம். அப்பா - அம்மாவின் பாதி ஜீவன் சேர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது. இருவரும் சமம் என்றாலும் அப்பாவை விட அம்மாவை ஒரு படி நாம் உயர்த்தி வைத்திருக்கிறோம் என்பதே உண்மை. 

அப்பா அறிவை ஊட்டுபவர், அம்மா அன்பைக் கொட்டுபவர். நமக்கு எதையும் அறிவுப் பூர்வமாகச் சொன்னால் கண்டுக்கொள்ள மாட்டோம், அதுவே அன்பாக சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வோம். அதனால் தான் பல வீடுகளில் அப்பா சொல்ல வரும் விஷயத்தை தன் குழந்தைக்குக் கடத்த அம்மா 'மீடியேட்டராக' செயல்படுகிறார். அதே போல் நாமும் எந்த ஒரு விஷயத்தையும் பட்டென அம்மாவிடம் சொல்வது போல், அப்பாவிடம் சொல்வதில்லை. அப்பா செல்லமாக வளர்ந்த மகளாக இருந்தாலும், படிப்பு, வேலை, காதல், திருமணம் போன்ற முக்கிய விஷயங்களை தன்னிச்சையாக அப்பாவிடம் சொல்ல முடியாமல் அம்மாவின் துணையை நாடுகிறாள். இதை ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? 

ஏனென்றால் பிள்ளைப் பேற்றில் பெண்ணின் பங்கு மிக அதிகம். ஆணால் ஒருநாளில் பலநூறு கோடி விந்தணுக்களை உருவாக்க முடியும், ஆனால் பெண்ணுக்கு மாதத்திற்கு ஒரு கருமுட்டை தான். அரும்பாடுப்பட்டு உருவாக்கிய அந்தக் கரு முட்டையை விந்தணுவோடு கலந்து கருவாக்கி, அதை தன் கர்ப்பப்பையில் சுமந்து, தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து சிசுவாக்கி, பெரும் வலியோடு அந்த சிசுவை ஈன்றெடுத்தப் பிறகும் கூட பிள்ளை தாயை சார்ந்து தான் வாழ்கிறது. வளர்ந்து பெரியவனாகினாலும் அவனது வாழ்வில் தாயின் பங்கு மிக அதிகம். 

ஆனால் இந்தப் பிள்ளைப் பேற்றில் ஆணின் பங்கு மிகக் குறைவு, கொஞ்சம் விந்தணுக்கள் மூலம், சில வினாடிகளில் தன் குலத்தை எந்த வித சிரமமும் இன்றி ஓர் ஆண் உருவாக்கி விடுகிறான். குழந்தைப் பிறந்தப் பின்பும் கூடவே இருந்து அதனை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நிர்பந்தம் எல்லாம் ஆணுக்கு இல்லை. 

தந்தை இல்லாத பத்து பேரையும், தாய் இல்லாத ஒருவரையும் பாருங்கள், நிச்சயம் அந்த வித்தியாசம் உங்களுக்குப் புரியும். அம்மா படிப்பறிவற்றவளாக இருக்கலாம், பொருளாதாரத்திற்கு கஷ்டப்படலாம், ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன் குழந்தையைக் கைவிடாமல் வளர்த்துப் பெரியாளாக்கும் வைராக்கியம் அவளுக்கு எப்போதும் உண்டு. 

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, 

அது தீயவராவதும் நல்லவராவதும் அன்னை வளர்ப்பினிலே" 

என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அந்த வளர்ப்பில் தாயின் பங்கே மேலோங்கி நிற்கிறது. மொத்த உலகத்தையும் தாயின் வழியாகவே குழந்தை பார்க்கிறது. தந்தை பொருளீட்டி வந்து, தேவையானவற்றை வாங்கித் தருகிறார், ஆனால் எந்த செலவும் இல்லாமல் தன் குழந்தையின் தலையைக் கோதி மடியில் தூங்க வைக்கும் அம்மாவின் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. 

நம் முகத்தைப் பார்த்து நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதை அம்மாவால் மட்டுமே உணர முடியும். பொதுவாக ஆண் குழந்தைகள் சின்ன வயதில் இருந்தே அம்மாவின் அரவணைப்பில் மயங்கிக் கிடப்பார்கள். ஆனால் பெண் குழந்தைக்கு தந்தை தான் சூப்பர் ஹீரோ. 'நிறைய சாக்லெட் சாப்பிட்டா சளி பிடிக்கும், வேண்டாம்' என சொல்லும் அம்மா அந்தப் பெண் குழந்தைக்கு வில்லியாகத் தெரிவார். 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நீ சாப்பிடு செல்லம்' என வாங்கிக் கொடுக்கும் அப்பா ஹீரோ ஆவார். ஆனால் மறுநாள் சளி பிடித்து மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கையில், அப்பா அலுவலகத்துக்குப் போயிருப்பார், அம்மாவோ நமக்கு கசாயம் வைத்துக் கொடுத்து, ரசம் சாதம் ஊட்டிக் கொண்டிருப்பார். 

இந்த முரண்பாடுகளுக்கிடையில், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற அடுத்த நொடியில் இருந்து தான் உண்மையிலேயெ ஒரு பெண் தனது அம்மாவை 'மிஸ்' செய்கிறாள். தான் தாயாகும் போது தன் தாயின் வலிகளையும் அர்ப்பணிப்புகளையும் முழுமையாக உணருகிறாள். இப்படி தன் வாழ்வின் பெரும் பகுதி நாட்களை தனது குழந்தைகளுக்காக கழிக்கும் அம்மாவுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? எதை செய்தாலும் அவள் அன்புக்கு ஈடாகாது. 

மனிதர்களாகிய நமக்கு உணர்வு ரீதியான அணுகு முறைகளே அதிகம். அதனால் தான் நம் உணர்வோடு கலந்திருக்கும் அம்மாவை தனியே பிரிக்க முடிவதில்லை. ஏனென்றால் நம் டிஸைனே அப்படித்தான்! 

அக்கரையோடு அவள் ஃபோன் செய்கையில் எடுத்துப் பேசுவதும், விடுமுறை நாட்களிலாவது ஃபேஸ்புக்கிற்கும், வாட்ஸ் ஆப்பிற்கும் லீவு கொடுத்துவிட்டு, அந்த நேரத்தை அம்மாவுக்கு ஒதுக்குவதும், ஓய்வு நேரங்களில் அவளுடன் மார்க்கெட் சென்று வருவதும், அவளுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் உடனிருந்து கவனித்துக் கொள்வதுமே அம்மாவுக்கு அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதைத் தவிர்த்து சில ஆயிரங்களில் வாங்கும் பட்டுப்புடவையும், பல ஆயிரங்களில் வாங்கும் வளையல், செயினும் ஒருபோதும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, 'நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள்? லவ் யூ மா' என சொல்லி விட்டு, அவளை இறுக்க அணைத்து ஒரு முத்தம் கொடுங்கள், அதில் அவள் பட்ட அத்தனை கஷ்டங்களும் சுக்கு நூறாக உடைந்து, உங்கள் இருவரின் கண்களையும் ஆனந்தக் கடல் ஆட்கொள்ளும்! 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP