நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?

இன்று கணினி யுக தாய்மார்கள் சந்திக்கும் சவால்களும் பிரச்சனைகளும் இதுவரை இல்லாதவைகளாகத்தான் இருக்கின்றன
 | 

நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?

நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?அம்மாக்கள் குழந்தைகளின் கையை சிறிது காலம் தான் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் இதயங்களை காலத்துக்கும் கையில் ஏந்தி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அம்மா என்றால் அன்பு; அன்பு தான் அம்மா என்று தன் அம்மாவை நினைத்து உருகாதவர்கள் யாருமே இந்த உலகில் இருக்க முடியாது. கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயை அனுப்புகிறான் என்று சொல்கிறது ஒரு யூத  பழமொழி. 

ஒரு தாய் தன் பிள்ளைகளை  மருத்துவர், வக்கீல், விஞ்ஞானி, சாப்ட்வேர் என்ஜினியர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. பிள்ளைகள் வாழ்வில் என்ன நிலையில் இருந்தாலும் ஒரு தாய்க்கு எப்போதும் அவர்கள் குழந்தைகள் தான். எல்லா காலங்களிலும் தாய் ஒரு மாதிரியே தான் இருக்கிறாள்.  கற்காலத்தில் மழைக்கும் இடிக்கும் நெருப்புக்கும் பயந்து தன் குழந்தையை கற்குகைக்குள் வைத்து போற்றி பாதுகாத்த தாயின் மனநிலையிலும் ஜீன்களிலும் இன்றும் எந்த பெரிய மாற்றமும் வரவில்லை. ஆகையால் தானே மாபெரும் தலைவர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை தாயை கோயிலாகவும் தெய்வமாகவும் பார்க்கிறார்கள். ஆமாம், கடவுள் மறுப்பு பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட தன் தாய் அஞ்சுகத்துக்கு வீட்டில் சிலை வைத்திருக்கிறார். மறைந்த ஜெயலலிதா தன் தாயார் பெயரில் தான் போயஸ் கார்டன் வீட்டை உருவாக்கினார். 

ஆனால், இன்று கணினி யுக தாய்மார்கள் சந்திக்கும் சவால்களும் பிரச்சனைகளும் இதுவரை இல்லாதவைகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக, கூட்டுக் குடும்ப முறை கிட்டத்தட்ட நம் கலாச்சாரத்தில் இருந்து அழிந்துவிட்ட நிலையில் கைக் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளை  வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் பிள்ளை வளர்ப்பு என்பது கடினமான விஷயமாக உள்ளது என்பதை முகநூலில் புலம்பும் பல தாய்மார்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைப் படித்தாலே புரியும்.

இளம் தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் 

நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?பிறந்த குழந்தையை வளர்ப்பது இன்றுள்ள இளம் தாய்மார்களுக்கு மிகவும் சிக்கலான விஷயமாகவே உள்ளது. முதல் ஐந்தாறு மாதங்கள் தாய் வீட்டுத் துணையுடன் குழந்தையை வளர்த்துவிடுகிறார்கள். அதன்பிறகு கணவன், மனைவியாக ஒரு குழந்தையை வளர்ப்பதற்குள் ஒரு யுகத்தையே கடந்து வந்த உணர்வு ஏற்படுகிறது. ஒரு ஆறு மாத குழந்தை நடு இரவில் அழுகிறது என்றால், அது ஏன் அழுகிறது என்பதைக கண்டுபிடிப்பது கூட சிரமமாக உணர்கிறார்கள். உடனே, பயந்து போய் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும் இளம் அம்மாக்கள் அதிகரித்து வருகிறார்கள்.

அதற்கு முதல் காரணம், தனக்கு குழந்தை வளர்ப்பில் ஒன்றும் தெரியாது. நாம் ஏதாவது செய்து அது குழந்தையை பாதித்துவிட்டால் என்ன செய்வது என்கிற பதற்றம் தான். தனியாக இருந்தால் குழந்தையை வளர்க்க முடியும், அதன் தேவைகளை புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கை மனதில் இருந்தால் குழந்தையை எளிதாக வளர்த்துவிட முடியும். நடைமுறைத் தீர்வு, தன் வீட்டில் மாமனார், மாமியார், பாட்டி என்று பெரியவர்கள் இல்லாதபட்சத்தில் அக்கம்பக்கத்து வீடுகளில் நல்ல தோழமையுணர்வோடு பழகி, அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். எதற்கெடுத்தாலும், கூகுளைத் தேடி ஓடுவதை விட இவர்களின் உதவியை நாடுவது சிறந்தது. 

பதின்பருவ பிள்ளைகளின் அம்மாக்களுக்கு 

ஒரு பிள்ளை 12-17 வயதுக்குள் என்ன பழக்க வழக்கங்களை கட்டமைத்துக்கொள்கிறதோ அதுதான் அதன் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்த வயதில் தான் பிள்ளைகள் நண்பர்களே உலகம் என இருப்பார்கள். அவர்கள் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து, நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறார்களா என்பதை ஒரு போலீஸ் போல் கண்காணிக்காமல், ஒரு நண்பனைப் போல் அணுகி தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, கணினி மற்றும் செல்போன்களை எதற்காக உபயோகிக்கிறார்கள், அதில் என்ன விஷயங்களைப் பார்க்கிறார்கள் என்பதை ஒரு அம்மாவாகத் தெரிந்துகொள்வது பிள்ளையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்க உதவும்.

நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?அதேபோல் அவர்கள் சரியான, தேவையான, சமச்சீரான உணவுகளை உண்பதற்கு பழக்கப்படுத்துவதும் அவசியமாகிறது. இதையெல்லாம் விட, மகனோ அல்லது மகளோ உங்களிடம் மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் தோழியாக இருப்பது அம்மா - பிள்ளை உறவு என்றும் அழகிய தோரணமாக வண்ணமயமானதாக மாற உதவும். இன்றைய குழந்தைகள் அம்மாவிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தட்டிக் கொடுத்து வளரும் பிள்ளை, அடித்து வளர்க்கும் பிள்ளையை விட எல்லா விதங்களிலும் உயர்வாக வாழ்வது கண்கூடு. 

40களைத் தாண்டிய அம்மாக்களுக்கு 

பெரும்பாலான வீடுகளில் 40 வயதைத் தாண்டிய அம்மாக்களின் பொறுப்புகள் ஓரளவு குறைந்திருக்கும். குழந்தைகள் கல்லூரி செல்பவர்களாகவோ, வேலைக்குச் செல்பவர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டிய தேவை இருக்காது. அவர்களே பெரும்பாலான வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள். அதனால் தாங்கள் ஒதுக்கப்படுகிறோமோ என்கிற பதற்றம் வரும். அதற்கு, நீங்கள் 'பிரி மெனோபாஸ்' ஸ்டேஜுக்கு வந்திருப்பதும் காரணமாக இருக்கலாம். 

நவீன யுகத்தின் அம்மாவாக இருப்பது சவாலா?40 வயதைத் தொட்டு, தாண்டிவிட்டால் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையோ என்று ஒரு முடிவுக்கு வராமல், சிறு வயதில் கற்க நினைத்த, உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். அது நடனமாகவும் இருக்கலாம். கணினியாகவும் இருக்கலாம். ஏன் விருப்பப்பட்ட தொழிலைக் கூட செய்து தொழில் முனைவோர் ஆகலாம். ஆம்!  கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை; மனம் தான். 

அம்மா, அப்பா என இரட்டை சுமைகளைச் சுமக்கும் 'சிங்கிள் மதர்ஸ்' எப்போதும் தங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு முக்கியம், 'எல்லாம் தன் குழந்தை மட்டுமே' என்று வாழ்வது. வாழ்வின் ஒரு கட்டத்தில் அது உங்களை உணர்வுரீதியாக பலவீனமாக்கலாம்.  ஆகையால் உங்களுக்கு என்று தனி விருப்பங்கள், கனவுகள் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை உங்கள் செல்லக் குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். 

அம்மாவாக வாழ்வது காலம் கொடுத்த கொடை. அதை கொண்டாடுவோம். மகிழ்ந்திருப்போம்!

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP