நவீன அறிவியலுக்கு ஷெர்லாக் செய்த உதவிகள்!

நவீன அறிவியலுக்கு ஷெர்லாக் செய்த உதவிகள்!
 | 

நவீன அறிவியலுக்கு ஷெர்லாக் செய்த உதவிகள்!

கடந்த 1887-ல் வெளிவந்த ஒரு கதையில் இருந்த கதாபாத்திரம் இன்றைய நவீன கால அறிவியலில் நிகழும் பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகவும், இப்போது நடக்கின்ற பல குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

'எ ஸ்டடி இன் ஸ்கார்லட்' என்கிற கதையை எழுதிய சர் ஆர்தர் கோனன் டாயில் அறிமுகப்படுத்திய கதாபாத்திரமே உலகப் புகழ்பெற்ற துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸ். 1800 காலகட்டங்களில் நிறைய துப்பறியும் கதைகள் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும் ஷெர்லாக் அவற்றில் இருந்து மிகுந்த மாறுபட்டிருந்தார். காரணம், அப்போதிருந்த துப்பறியும் கதைகளில் வரும் கதாநாயகர்கள் தற்செயலாக கண்டுபிடிக்கும் ஆதாரமும், அதிர்ஷ்டத்தின் மூலமாக கிட்டும் ஆதாரங்கள் மூலமாகவும் மட்டுமே ஒரு குற்றவாளியை கண்டுபிடிப்பதாக கதைகள் இருக்கும். ஆனால், ஷெர்லாக் அப்படியல்ல. முழுக்க முழுக்க தகவல்கள் அடிப்படையில்தான் அவரது துப்பறியும் திறன் இருக்கும்.

அதாவது, ஒருவர் அணிந்திருக்கும் உடை, அவரது உடலில் இருக்கும் அணிகலன்கள், அவரது முகபாவனைகள் இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு அவரது அடிப்படையான குணநலன்கள், அவரது வாழ்க்கைமுறை போன்றவற்றை அறிவியல்பூர்வமாக கணித்துக் கூறுவதே ஷெர்லாக்கின் துப்பறியும் முறை. இந்தக் கதாபாத்திரத்தை சர் கோனன் டாயில் அன்றைய பிரபல மருத்துவராக விளங்கிய ஜோசெப் பெல் என்பவரை அடிப்படையாக வைத்தே உருவாக்கினார். அந்த மருத்துவர் மற்றவர்களை போல் அல்லாமல் நோயாளிகளின் புறத்தோற்றத்தை அடிப்படையாக வைத்தே நோய்களைக் கண்டறியும் திறன் பெற்றிருந்தார். இதை தன் கதையில் மிக புத்திசாலித்தனமாக ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டார்.

சரி... இந்தக் கதைகள் எப்படி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்கின்றன என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். 1800-களில் ஒரு கொலை நடந்தால் முதலில் அந்தக் குற்றம் நடந்த இடத்தை (க்ரைம் ஸீன்), கொலை செய்யப்பட்டவரின் உடலை எந்தவித புறக் காரணிகளும் பாதிக்கக்கூடாது என்கிற அடிப்படை விஷயம் கூட காவல்துறைக்கு தெரியாது. குறிப்பாக 'ஜாக் தி ரிப்பர்' போன்ற கொடூர சீரியல் கொலைகாரர்கள் வாழ்ந்த காலகட்டம் அது. இதுவரை 'ஜாக் தி ரிப்பர்' யாரென்று கண்டுபிடிக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் இந்த மேற்குறிப்பிட்ட குற்றம் நடந்த இடம் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் நிலை காவல்துறை வருவதற்கு முன்பே பலராலும் கையாளப்பட்டதுதான். 

ஆனால், டாயில் தன் ஷெர்லாக் கதைகளில் இதை முற்றிலும் மாற்றியமைத்தார். குற்றம் நடந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வாரியம் இடுவதன் மூலமும், கொலையுண்டவர் உடலை எந்தவித சேதமும் செய்யாமல் வைத்திருப்பதன் மூலமும் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான சதவீதம் அதிகரிக்கும் என்பதை தன் கதைகளில் ஒரு முக்கிய அம்சமாக அவர் கொண்டிருந்தார். இதை முன்மாதிரியாக வைத்துதான் 'ஃபாரன்சிக் சயின்ஸ்' என்கிற தடய அறிவியல் துறை என்கிற ஒரு விஷயமே காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டது. இது ஷெர்லாக் கதைகள் மூலம் ஏற்பட்ட முதல் நன்மை.

அடுத்தபடியாக பிரேதப் பரிசோதனை மூலமாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும் என்பதையும் தன் கதைகளில் டாயில் எழுதினார். அவர் எழுதிய 15 வருடங்கள் கழித்தே இந்தப் பிரேத பரிசோதனை மூலம் குற்றம் நடந்த தன்மையையும், குற்றவாளியை அதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதையும் காவல்துறை கண்டுகொண்டது. அதேபோல் ரத்தப் பரிசோதனை, டி.என்.ஏ பரிசோதனை, உடலில் இருக்கும் தழும்புகள் போன்றவற்றின் மூலமும் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலும் என்பதெல்லாம் ஷெர்லாக் கதைகளில் வந்தபின்னரே காவல்துறை அதன்மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தது. 

இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று துப்பாக்கிகளின் பயன்பாடு அதிகமானதற்கு பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. அந்த இடத்தில்தான் ஷெர்லாக் துப்பறியும் சாகசம் செய்த ஒரு நாவலில் "என்னதான் ஒரே வடிவ துப்பாக்கியாக இருந்தாலும், ஒரே அளவு குண்டு உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டுகளும் வேறு வேறு மாதிரியான முடிவுகளையே கொடுக்கும்" என்று சொல்லியிருப்பார். இந்த விஷயம் தடய அறிவியலில் மிகப்பெரிய மாற்றத்தையே உண்டாக்கியது. இதன் மூலமாக கொலை செய்யப்பட்டவரின் உடலில் துளைத்திருக்கும் குண்டை வைத்து அது எந்தத் துப்பாக்கியில் இருந்து வெளிவந்திருக்கும் என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் குற்றவாளியை பிடிக்கும் முறை அறிமுகமானது.

இப்படி சர் கோனன் டாயில் தன் நாவல்களில், சிறுகதைகளில் ஷெர்லாக்கை வைத்து எழுதிய எல்லா விஷயங்களும் அறிவியல்பூர்வமாக உண்மையாகவும், குற்றவாளியை நெருங்குவதற்கு உதவி செய்யும் ஒரு கருவியாகவும் இருந்தது. இருந்துகொண்டு இருக்கிறது. இன்றைய எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படை என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இந்த அடிப்படை மிகச்சரியானதாக அமைந்துவிட்டால் கண்டுபிடிப்புகள் மிக எளிதானதாக ஆகிவிடும். இதை தன் கதைகள் மூலம் சர் கோனன் டாயில் சாத்தியப்படுத்தினார். ஷெர்லாக்கின் புகழ்பெற்ற வசனமான, "Theory should fit the Data... Not the data fit the theory..." இந்த அடிப்படையை வழங்கியது.

மேலும் ஷெர்லாக் கதைகளில் அவர் இறந்த உடல்களின் மீது ஆராய்ச்சி செய்வது எல்லாம் மிகவும் விளக்கமாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக குதிரையை அடிக்கும் சாட்டையை வைத்து இறந்தவரின் உடலில் தொடர்ந்து அடிப்பதன் மூலம் அது அந்த உடலில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிதல், மின்மினிப் பூச்சிகளை ஒரு ஜாரில் அடைத்துவைத்து, அதன் அருகில் நின்று வயலினில் ஒரு குறிப்பிட்ட இசையை வாசித்தால் அந்தப் பூச்சிகள் எந்த திசையை நோக்கி பறக்கிறது என்பதை கண்டுபிடித்து, அதன்மூலம் அந்த இசை உருவாக்கும் அலைகள் என்ன மாதிரியாக இருக்கும் என்பதை கண்டறிவது, 213-க்கும் அதிகமான புகையிலை வாசனைகளை பிரித்தறியும் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் குற்றவாளியை அல்லது தான் சந்திக்கும் மனிதரை பற்றி அவர்கள் சொல்லாமலே அறிந்து கொள்வது போன்ற இயல்பு வாழ்க்கைக்கு சற்றும் ஒத்துவராத பல விஷயங்களை ஷெர்லாக் தொடர்ந்து செய்வதாக கதையில் வரும். 

இவையெல்லாம் ஏதோ ஒரு இடத்தில ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கும் கருவியாக ஷெர்லாக்குக்கு உபயோகப்படும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருளின் தன்மையை நாமும் அறிந்துகொள்ளலாம். இது எதுவுமே கதைக்காக எழுதப்பட்ட வெறும் பொய்யான விஷயங்கள் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

உண்மையில் பார்க்கப்போனால் ஷெர்லாக்கை அவர் இன்னாரென்று அறியாமல் முதன்முதலில் சந்திக்கும் எவரும் அவரை ஒரு கோமாளியென்றே நினைப்பார்கள். சிலர் அவர் ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்று நினைப்பதாக கதைகளிலே கூட வந்திருக்கிறது. காதல் மீது நம்பிக்கையில்லாத, உறவுகள் மீது விருப்பமில்லாத, எல்லாவற்றையும் அறிவியல் பார்வையில் மட்டுமே பார்க்கும் ஷெர்லாக் ஒரு கொக்கைன் என்னும் போதை மருந்தின் அடிமை. ஷெர்லாக் இடம்பெற்ற கதைகள் கிட்டத்தட்ட உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

இந்தக் கதைகள் வந்த காலகட்டத்தில் ஷெர்லாக்கிற்கு இருந்த விசிறிகள் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. மொத்த பிரிட்டனும் ஷெர்லாக்கை நேசித்தது. அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதையே பலர் ஏற்கவில்லை. அவரது முகவரியான 221B, Baker street-க்கு கடிதங்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தது. பலரும் அவரது ஆட்டோகிராப் கேட்டு, புகைப்படம் கேட்டு, திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்றெல்லாம் கேட்டு கடிதங்கள் எழுதினார்கள். தொடர்ந்து ஷெர்லாக் கதைகள் எழுதி களைப்புற்ற கோனன் டாயில் "The Final Problam" என்றொரு கதையில் ஷெர்லாக் இறந்துவிடுவதாக எழுதிவிட, "ஷெர்லாக் மட்டும் அடுத்தக் கதையில் உயிரோடு வரவில்லையென்றால் நான் உன்னைக் கொலை செய்துவிடுவேன்.." என்பன போன்ற மிரட்டல் கடிதங்கள் எல்லாம் ஆசிரியருக்கு வந்ததாம். 

ஷெர்லாக் ஹோம்ஸ்... ஒரு நிழல் சரித்திரம். பல உண்மையான கண்டுபிடிப்புகளின் நிஜ ஆணிவேர். ஒரு மேதையின் மூளையில் உதிர்த்த அமரர். உலகில் அதிகளவில் படமாக்கப்பட்ட, நாடகமாக எடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமும் இவர்தான். ஷெர்லாக்கிற்கு மரணம் சாத்தியமே இல்லை.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP